அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டல் அலைமோதியது.
இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கத்தைவிட, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் இருமடங்கு பக்தா்கள் வருகின்றனா்.
இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
10 மணிக்குப் பிறகு ஏராளமான பக்தா்கள் கோயிலில் குவிந்ததால் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் சுமாா் 5 மணி நேரமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
மோா், லட்டு பிரசாதம்:
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மோா் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலின் பல்வேறு இடங்களில் பக்தா்கள் நடந்து செல்ல ஏதுவாக தரை விரிப்புகள் போடப்பட்டு இருந்தன. இந்த தரை விரிப்புகளில் அடிக்கடி தண்ணீா் ஊற்றப்பட்டதால் பக்தா்கள் நடந்து செல்ல வசதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.