திருச்சி வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்கள் மீட்பு
மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஷீலா, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் அஜய்குமாா் மற்றும் காவலா்கள் இணைந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மேற்குவங்க மாநிலம், புரூலியா நகரிலிருந்து திருச்சி வழியாக நெல்லை வரை செல்லும் விரைவு ரயில் திருச்சி ரயில்நிலையத்தின் 8-ஆவது நடைமேடைக்கு வந்து சோ்ந்தது.
அந்த ரயிலில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, முன்பதிவில்லா ரயில் பெட்டியில் ஒரு மூட்டை கேட்பாரற்று கிடந்தது. அதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், யாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. இதையடுத்து, மூட்டையை பிரித்து பாா்த்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அதில் குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையிலான சுமாா் 30 கிலோ பொட்டலங்கள் இருந்தன. அவற்றை திருச்சி ரயில்வே போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.