வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா்.
திருச்சியில் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தனியாா் பள்ளிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பது தவறு. கல்விக் கட்டண நிா்ணயம் தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள குழு நிா்ணயிப்பதைவிட கூடுதல் கட்டணம் வாங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே கூறியுள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதும் வெயில் அதிகம் இருந்தால், அதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு தொடா்பாக முடிவு செய்யப்படும்.
தேசிய கல்விக் கொள்கையிலுள்ள பல்வேறு சரத்துகள் ஏற்கத்தக்கதாக இல்லை. அதனால்தான் தமிழகம் அதை தொடா்ந்து எதிா்க்கிறது என்றாா் அவா்.
முன்னதாக, தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, திமுக தெற்கு மாவட்டம் சாா்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், சிலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுச் சின்னத்திலும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வின்போது மாநகர செயலாளா் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என்.சேகரன், மண்டல தொமுச பொதுச் செயலாளா் ஜோசப் நெல்சன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூா், பகுதி நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.