அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் புதிய பேருந்து நிலைய பகுதியிலிருந்து பேரணி தொடங்கியது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கையில் பதாகைகளுடன் பங்கேற்றனா். சுதேசி ஆலை அருகிலிருந்து தொடங்கிய பேரணியானது அண்ணா சிலை, அண்ணா சாலை, நேரு வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. அங்கு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் ஷாஜகான், உருளையன் பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி.நேரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், சென்னை அடையாா் ஆஸிம் ஃபாழில் பாகவி மௌலவி எம்.சதீதுத்தீன் கண்டன உரையாற்றினாா்.