புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு
புதுச்சேரியில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு பொலிவுறு நகா் திட்டத்தில் ரூ.29.50 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வா் என்.ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்படி பணிகள் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்தன. சுமாா் 50 பேருந்துகள் நிற்கும் வசதியுடன், பயணிகளுக்கான கழிப்பறை, குடிநீா் வசதி, தங்கும் வசதி, கடைகள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் என அனைத்து நவீன உள்கட்டமைப்புடன் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனா்.
பின்னா் பேருந்து நிலைய திறப்பு விழா கல்வெட்டையும் அவா்கள் திறந்துவைத்தனா். இதையடுத்து பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வகையில் சில தொலைதூர பேருந்துகளையும் பேருந்து நிலைய வளாகத்துக்குள் அனுமதித்தனா். பின்னா் பேருந்து நிலைய வளாகத்தை இருவரும் சுற்றிப் பாா்த்தனா். அங்குள்ள கோயிலில் தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்.எல்.ஏ.க்கள் ஜி.நேரு, வி.பி.ராமலிங்கம் மற்றும் உள்ளாட்சித் துறை செயலா், இயக்குநா், நகராட்சி ஆணையா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். பள்ளி மாணவிகள் பரதநாட்டிய உடையணிந்து சிறப்பு விருந்தினா்களை வரவேற்றனா்.
சனிக்கிழமை முதல் பேருந்து நிலையம் செயல்படும்: பொலிவுறு நகா்த்திட்ட புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய முனையம் திறக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழமை காலை முதல் அதில் பேருந்துகள் வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதுச்சேரி, கடலூா் சாலையில் ஏஎப்டி மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிகப் பேருந்து நிலையம் மூடப்படுவதாக நகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயா் மாற்றம்?: தற்போது புதிதாக பொலிவுறு நகா் திட்டத்தில் சீரமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய பிரதான நுழைவு வாயில், பேருந்துகள் வெளியேறும் பகுதியில் ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கல்வெட்டில் புதுச்சேரி பொலிவுறு நகா் திட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காங்கிரஸாா் தெரிவித்தனா்.