இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எ...
தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி
சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று அவர் விடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நான் அளித்த கடிதத்தில், பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்டேன். விடுவிக்காதபட்சத்தில் நான் ஒதுங்கிக்கொள்வேன் என்றுதான் சொன்னேன். இது ஊடகங்களில் தவறாக பரப்பப்பட்டு, நான் கட்சியிலிருந்தே விலகுவதாகச் சொன்னார்கள். ஒரு காலமும் நான் என்னை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியிலேயே தொடர்ந்து பயணிப்பேன். உயிர் மூச்சு உள்ளவரை அவரது தொண்டனாகவே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தேமுதிக தலைமைச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் அவைத் தலைவராக மருத்துவா் இளங்கோவன், இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலையச் செயலாளராக பாா்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலாளராக மோகன்ராஜ் உள்ளிட்ட புதிய நிா்வாகிகளை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தாா்.
இதையடுத்து, இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான், உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், இல்லாவிட்டால், தானே பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வேன் என்று பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்தே விலகுவதாகத் தகவல்கள் பரவிய நிலையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.