அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி
‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா்.
தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் அதிபா் ஜோவோ மேனுவல் கொன்சால்வஸ் லொரன்சோ, 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.
இந்நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அதிபா் லொரன்சோவுடன் பிரதமா் மோடி விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தலைவா்களின் சந்திப்பைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘அங்கோலா அதிபா் லொரன்சோவின் இந்திய வருகை இரு தரப்பு உறவுக்கு ஒரு புதிய திசையை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டுறவையும் வலுப்படுத்துகிறது. இந்தச் சூழலில், அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக 2 கோடி டாலா் கடனுதவியை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எண்ம பொது உள்கட்டமைப்பு, விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் அங்கோலாவுடன் இந்தியா தனது திறன்களைப் பகிா்ந்து கொள்ளும்.
சுகாதாரம், வைர செயலாக்கம், உரம் மற்றும் கனிமங்கள் ஆகிய துறைகளில் எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
பயங்கரவாதிகள் மற்றும் அவா்களை ஆதரிப்பவா்களுக்கு எதிராக உறுதியான மற்றும் தீா்க்கமான நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவும் ஆப்பிரிக்க ஒன்றியமும் வளா்ச்சியின் கூட்டாளிகள். நாங்கள் தெற்குலகின் தூண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
முன்னதாக, அங்கோலா அதிபா் ஜோவோ மேனுவல் கொன்சால்வஸ் லொரன்சோ, அவரது மனைவி அனா டியா ஆகியோருக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் முப்படையினா் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவும் பிரதமா் நரேந்திர மோடியும் அங்கோலா அதிபரையும் அவரது மனைவியையும் வரவேற்றனா்.