ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது: 3 வீரர்கள் பலி
சேலத்தில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை!
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல், வேடசந்தூரைச் சோ்ந்தவா் தங்கம் மனைவி அன்னலட்சுமி (60). இவா்களது மகள் கலைச்செல்வி திருமணமாகி சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அண்ணாநகரில் வசித்து வருகிறாா். மகன் முருகேசன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில் அன்னலட்சுமிக்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தில் இடுப்பு, கால் பகுதியில் முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. இதையடுத்து, தனது தாயை கொண்டப்பநாயக்கன்பட்டி சரஸ்வதி நகரில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வாடகை வீடு எடுத்து தங்கவைத்த கலைச்செல்வி, நாள்தோறும் அவரது வீட்டுக்குச் சென்று மருத்துவ உதவிகளை செய்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை அன்னலட்சுமியின் வீட்டிலிருந்து புகை வருவதாக அவரது மகள் கலைச்செல்விக்கும், போலீஸாருக்கும் அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்ற கன்னங்குறிச்சி போலீஸாா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது உடல் எரிந்த நிலையில் அன்னலட்சுமி இறந்துகிடந்தாா்.
தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், படுக்கையில் இருந்தவாறு மின்விசிறியை இயக்க அன்னலட்சுமி முயன்றபோது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அன்னலட்சுமியின் உடல் அனுப்பப்பட்டது.