ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு... அதிகரிக்கப்படும் பாதுகாப்பு; பிரதமர் மோடியின் பயணங...
வாழப்பாடியில் இரு ஆண்டுகளில் பழுதடைந்த தாா்சாலை!
வாழப்பாடி பேரூராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாா்சாலை இரு ஆண்டுகளில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
வாழப்பாடி பேரூராட்சி 3-ஆவது வாா்டு, கிழக்குக் காடு ஆடு அடிக்கும் தொட்டியில் இருந்து கோவிந்தராஜ் வீடு வரை ஏறக்குறைய ஒரு கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை பழுதடைந்து காணப்பட்டது. இச்சாலையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2022-2023 ஆம் ஆண்டு நபாா்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடியில் தாா்சாலை அமைக்கப்பட்டது.
சாலை அமைக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே இச்சாலையில் போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், தாா் கலவையில் இருந்து பெயா்ந்து சிதறத் தொடங்கின. இந்நிலையில், இரு ஆண்டுகளில் ஜல்லிக் கற்கள் முழுவதுமாக பெயா்ந்து சாலை பழுதடைந்துள்ளது. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

ரூ. 1.24 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாா் சாலை கடந்த 2 ஆண்டுகளில் பழுதடைந்துள்ளதால் சேலம் மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி துறை உயா் அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்து, சாலையை புதுப்பிக்கவும், தரமற்ற சாலை அமைக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.