இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எ...
சூரியன் நடத்துகின்ற வண்ண விளக்கு ஜாலம்! - `அரோரா’ பற்றித் தெரியுமா? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வலுவான புவிகாந்த புயலினால், வட அமெரிக்காவில் பல இடங்களில் இன்று அரோரா பொரியாலிஸ் தெரியும் என்று கணித்திருக்கிறார்கள்.
வடக்கு அரைக் கோளத்தில் பலரையும் கவர்ந்திழுக்கும் நிகழ்வு அரோரா பொரியாலிஸ். ஒருவரையொருவர் சந்திக்கும் போது. பலரும் கேட்கும் முக்கியமான கேள்வி, “நீங்கள் அரோரா பார்த்தீங்களா” என்பதே. பல வாட்ஸ் அப் குழுக்களில் அதிகம் பகிரப்படுவதும் அரோரா படங்கள்.
சூரியன் நடத்துகின்ற இந்த வண்ண விளக்கு ஜாலங்கள் உண்மையிலே அற்புதம். அரோரா பார்ப்பதற்கு ஒளி மயமான நகரத்தை விடுத்து, மிகவும் இருட்டாக இருக்கும் பகுதிக்கு வெகு தூரம் செல்ல வேண்டும். பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

அரோரா பொரியாலிஸ் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இந்த வண்ண விளக்குகள் புதியதல்ல. சற்றேறக்குறைய 30000 வருடங்களுக்கு முன்பாகவே, மக்கள் இந்த அழகிய நடனமாடும் விளக்குகளைப் பார்த்து இரசித்திருக்கிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு பழமையான குகையில், இந்த வண்ண விளக்குகள் பற்றிய ஓவியம் இருக்கிறது. கி.மு 567ஆம் வருடம் பாபிலோனியா அரசர் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பற்றிச் சீனர்கள் கிமு. 193இல் எழுதிய விவரங்கள் கிடைத்துள்ளன.
நார்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கி.மு.1050 ஆண்டிலிருந்து, கி.மு.800 ஆண்டு வரை வாழ்ந்திருந்த கடல் வாணிகம் செய்வோர், மற்ற நாடுகள் சென்று அதைக் கைப்பற்றி ஐரோப்பாவின் பல பாகங்களில் குடியேறியவர்கள் வைகிங்க் எனப்பட்டனர். அவர்கள் வடக்கு விளக்குகள் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயான பாலம் என்று கருதினர்.
பின்லாந்தில், இந்த விளக்குகள் மந்திரம் என்றும், நரிகள் ஏற்றும் தீப்பிழம்புகள் என்றும் கருதப்பட்டன. நார்வே மக்கள் இவற்றைக் கையுறைகளை அசைத்துக் காட்டும் கன்னிபெண்களாகக் கருதினர். ஒட்டாவா பழங்குடியினர் ஆவியிலிருந்து உருவான கலங்கரை விளக்கம் என்றனர். சைபீரிய மக்கள் இந்த விளக்குகள் உண்மையான தெய்வம் என்று நம்பினர்.

ஜப்பானிய மக்கள், வடக்கு விளக்குகள் தெரியும் சமயத்தில் கருத்தரிப்பது, குழந்தையின் எதிர்காலம் வளமாக இருக்க உதவும் என்று நம்பினர்.
வைகிங்க் இனத்தவர் கடலில் பயணம் செய்யும் போது, வண்ண விளக்குகளைப் பார்த்து அதற்கு “வடக்கு விளக்குகள்” என்று பெயர் சூட்டினர்.
பிற்காலத்தில், இத்தாலிய வானியலாளர் கலிலியோ, ரோமானியரின் விடியலின் தெய்வத்தின் பெயர் அரோரா மற்றும் வடக்குக் காற்றிற்கான கிரேக்க கடவுளின் பெயர் போரியாஸ் இரண்டையும் இணைத்து, இந்த வானிலை நடனத்திற்கு “அரோரா பொரியாலிஸ்” என்று பெயரை 1619ஆம் ஆண்டு சூட்டினார்.

இதன் அர்த்தம் “சிவப்பு தங்க வடக்கு” என்பது. இந்த வடக்கு விளக்குகள் பூமிக்கு அருகில் தெரியும் போது பச்சை நிறத்திலும், வளி மண்டலத்தில் சிவப்பு நிறத்திலும் தோன்றும். இத்தாலியிலிருந்து பார்த்த கலிலியோ, சிவப்பு நிறத்தைப் பார்த்த காரணத்தால் இந்தப் பெயரை சூட்டியதாகவும் கருத்து நிலவுகிறது.
இந்த அரோரா பொரியாலிஸ் தெரிவதற்கான அறிவியல் விளக்கத்தை கண்டு பிடித்தவர், நார்வே நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் பிர்க்லேண்ட் என்ற விஞ்ஞானி. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் பெற்ற துகள்கள், பூமியின் வளிமண்டலத்தை, மணிக்கு 45 மில்லியன் மைல்கள் என்ற வேகத்தில் மோதுகின்றன.
பூமியைச் சுற்றியிருக்கும் காந்த சக்தி, இந்தத் துகள்களை, பூமியை நெருங்காமல் காத்து, அவற்றைத் துருவங்கள் பக்கம் வழி நடத்துகின்றன இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஏற்படுகின்ற இரசாயனக் கலவையால் வளிமண்டல வண்ண விளக்குகள் உருவாகிறது.
இந்தத் துகள்கள் நைட்ரஜன் மூலக்கூறுகளின் சேர்க்கையால் சிவப்பு நிற ஒளியையும், ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் சேர்க்கையால் பச்சை நிற ஒளியையும், ஹைட்ரஜனால் நீல நிற ஒளியையும் வெளிப்படுத்துகின்றன.

வடக்கு அரைக் கோளத்தில், இந்த நிகழ்வு, வடக்கு விளக்குகள் (அரோரா பொரியாலிஸ்), என்றும் தெற்கு அரைக் கோளத்தில் இந்த நிகழ்வு தெற்கு விளக்குகள் (அரோரா ஆஸ்ட்ராலிஸ்) என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த நிகழ்வுகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நம்முடைய கண்ணிற்குப் புலப்படுவதில்லை. சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் ஆற்றல் மிக்க துகள்கள் 11 வருட சுழற்சியில் ஏற்படுகிறது.
சில சமயம் இவற்றின் ஆற்றல் மற்றும் வேகம் குறைவாக இருக்கும். இந்தத் துகள்களின் ஆற்றல் அதிகமாக இருக்கும் போது ஏற்படும் இரசாயனச் சேர்க்கை, நம்முடைய கண்ணிற்குப் புலப்படுகிறது. 2025ஆம் வருடம் முன் பகுதி வரை இது தொடரும் என்று கணித்திருக்கிறார்கள்.

பூமியைப் போலவே, மற்ற கோளங்களிலும், இதைப் போன்ற வானிலை விளக்குகள் ஏற்படுகின்றன. இதனுடைய தன்மை கோளங்களைச் சுற்றியுள்ள காந்த சக்தியைப் பொறுத்து மாறுபடும். ஜூபிடரைச் சுற்றியுள்ள காந்த சக்தி பூமியை விட 20000 மடங்கு பெரியது. ஆகவே இங்கு ஏற்படும் வானிலை விளக்குகள், பூமியில் காணப்படுவதை விடவும் பிரகாசமாக இருக்கும்.
-கே.என்.சுவாமிநாதன், சென்னை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.