பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
Travel Contest : இவ்வளவு தானா தாஜ்மஹால்? - ஏமாற்றம் அளித்த அந்த இரவு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பனி விழும் இரவு, நனைந்தது நிலவு... இந்த பாட்டில்தான் முதன்முதலில் இந்தியாவில் உள்ள உலக அதிசயம் மனதை வருடியது. பத்துவயதில் ரசிக்க தொடங்கிய காதல் சின்னத்தை 30 வருடங்களுக்கு பிறகு நேரில் காணப்போகிறேன் என்ற துள்ளல் இருந்தது.
நாங்கள் மதுராவை சுற்றிவிட்டு நவம்பர் பதினைந்தாம் தேதி ஞாயிறு இரவு (2023)ஆக்ரா வந்தடைந்தோம். திங்கள் கிழமை காலை முதல் ஆக்ராவில் அக்பர், மும்தாஜின் இரு குழந்தைகள், அக்பரின் சகோதரி இவர்களது கல்லறைகளைத் தரிசித்துவிட்டு பகல் நேரத்திலேயே மெஹதாப் பாக் ( Mehtab bagh)வந்து சேர்ந்தோம்.

தூரத்தில் இருந்து தாஜ்மஹாலைக் காண அருமையான இடம் இந்த மெஹதாப் பாக். இந்த முகலாயத் தோட்டத்தில் உள்ள பசுமையான எந்த மரம், செடி, கொடிகளும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.
மெல்ல மெல்ல இதயத்துடிப்பு பரவசத்தில் வேகமாக இயங்க, நடையும் வேகமானது. எத்தனையோ புகைப்படங்கள், சினிமாப் பாடல்களில் கண்ட இந்த உலக அதிசயம் கண்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நேரில் குடியேற என் பிள்ளைகளுக்கோ ஒரே குதூகலம். ஒருவர் மாற்றி ஒருவர் செல்பிகளாக எடுத்துக்கொண்டு இன்னும் அருகில் சென்றால் நீரில்லாத யமுனை கரையில் தாஜ்மஹாலை பார்த்து ஏமாந்தோம்.
மணிரத்தினம் "மௌன ராக"த்தின் ஒளிப்பதிவை எந்த மாதம் செய்திருப்பார் என எண்ணிக்கொண்டே தோட்டத்தின் வழியிலிருந்து வெளியேறி அசல் வழியில் தாஜ்மஹாலை காணச் சென்றோம்.
மாலை 3 மணிக்கு காதல் சின்னத்திற்கு குளிரடித்தது போல. பனி மூடிய தாஜ்மஹால் வெள்ளை போர்வைக்குள் எட்டிப் பார்த்தது போல இருந்தது. நாங்கள் மறுநாள் சூரிய உதயத்திலும் காண விரும்பியதால் உள்ளே செல்ல அனுமதிச்சீட்டு வாங்காமல் வெளியில் மட்டும் சுற்றினோம்.

இரவிலும் தாஜ்மகாலை காணலாம் எனில் பௌர்ணமி நாட்களில் மட்டுமே சிறப்பு அனுமதியாம். திரும்பவும் ஏமாற்றம்.
இதைக்கட்டிய ஷாஜகான் கூட தாஜ்மஹாலை இத்தனை கோணங்களில் இதைப் பார்த்திருக்க மாட்டார். நானும், என் மகனும், மகளும் எண் திசைகளிலும் எத்தனையோ விதமாக அமர்ந்து தாஜ்மஹாலை கண்டு ரசித்தோம். ரசனையை விட அன்று ஏமாற்றமே இருந்தது.
தோட்டத்தில் தூரத்திலேயே துள்ளிய மனம் ஏனோ அருகில் வந்த பிறகு துள்ள வில்லை. இவ்வளவு தானா தாஜ்மஹால் என்ற கேள்வியே தொங்கியது.
மாலைப் பனி நவம்பர் மாத காலம் தாஜ்மஹாலின் அழகை ஒளித்துக் கொண்டது. மறுநாள் காலையில் தான் காதல் சின்னம் எங்களைப் பரவசப்படுத்தியது. சூரிய ஒளி தாஜ்மஹாலுக்கு தன் வெளிச்சத்தை பாலாக வளர்த்தது. 30 வருடங்களுக்கும் மேலாக நிழலில் கண்ட அந்த கனவுச் சின்னம் அன்றுதான் நினைவுச் சின்னமானது.

பரிசோதனைகளைக் கடந்து அவர்கள் அளித்த காகித காலுறைகளை அணிந்து உள்ளே சென்று மும்தாஜ்,ஷாஜகான் கல்லறையை சுற்றி வந்த அந்த நொடி தான் ஷாஜகானின் காதல் புரிந்தது.
கலை நுணுக்கங்கள் மூலமாக அவர் தனது மனைவியின் மேல் கொண்ட அன்பை உலகிற்கு சொல்லி இருக்கிறார்.
உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சலவை கற்களை நேர்த்தியாக செதுக்கி நமது கண்களுக்கு ராஜவிருந்து கொடுத்த கைகளுக்கு சிறந்த வணக்கங்கள். தாஜ்மஹாலின் மொத்த சிறப்பும் அந்த மொகலாய காதல் தம்பதிகளின் கல்லறையைச் சுற்றி இருக்கிறது என்பேன். சூரியன் எங்களை ஏமாற்றாமல் தாஜ்மஹாலை ரசிக்க வைத்தான்.
நிலவு எப்பொழுது எங்களை ரசிக்க வைப்பாள் என காத்திருக்கிறோம். தாஜ்மஹாலை ரசிக்க விரும்பும் விகடன் நேயர்களே! முன்பதிவு செய்து பௌர்ணமி இரவில் அதன் அசல் அழகைக் கண்டு களியுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.