Travel Contest : பரவச அனுபவம்! - காவிரியில் அற்புதமான ஒரு சாகச சவாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
கர்நாடகாவின் குடகு மாவட்டம் தான் கூர்க் என்கிற மலைப்பிரதேசம். நம்ம ஊரில் உள்ள மனதுக்கு நெருக்கமான ஆறான காவிரியின் பிறப்பிடம் தலை காவேரி அமைந்துள்ள மாவட்டம்.
கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையையும் காபி தோட்டங்களையும் மூங்கில் காடுகளையும், எப்போதும் நிலவும் இதமான காலநிலையையும்(அதிக குளிரும் இல்லாமல் அதிக வெயிலும் இல்லாமல்) கொண்ட ஒரு இடம். கூர்கில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது.

நீர்வீழ்ச்சி, பூங்காக்கள், கோவில்கள், வியூ பாயிண்ட்ஸ், கோட்டைகள், நிசகர்தாமா என்னும் தீவு, யானைகள் முகாம் என்று இன்னும் பல. இதில் நான் மிகவும் ரசித்து அனுபவித்த ரிவர் ராஃப்டிங் என்ற நதியில் மேற்கொள்ளப்படும் ஒரு சாகச சவாரி பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இங்கு காவிரியில் தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும் பொழுது தான் முழு அளவிலான ராஃப்டிங் செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டால் படகு சவாரி மட்டும் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கூட்டி செல்வார்கள்.
அவ்வாறு காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருக்கும் பொழுது ஒரு முழு சாகச சவாரி செய்வது நாம நினைத்து பார்க்க முடியாத அளவு அதி அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த ரிவர் ராஃப்டிங் அப்படிங்கறது எனக்கு தெரியவே தெரியாது. இது எனக்கு சொன்னது என்னோட ஒரு உடன்பிறவா தம்பி.
“தண்ணீர்ல படகுல கூட்டிட்டு போவாங்க சூப்பரா இருக்கும்” அப்படின்னு தான் சொன்னாங்க. வேற என்ன மாதிரி இருக்கும், அது சம்பந்தமான புகைப்படங்கள் எதுவும் நான் பார்த்ததில்லை. தண்ணீர்ல கூட்டிட்டு போவாங்க ரொம்ப நல்லா இருக்கும் அப்படின்னு சொன்ன உடனே இந்த சாகச சவாரியை செய்து விடவேண்டும் அப்படின்னு தோணுச்சு. எந்த வகையான எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பயணத்தை மேற்கொண்டேன்.

ராஃப்டிங் பண்ற இடத்துக்கு போயிட்டு டிக்கெட் எல்லாம் வாங்கிட்டு அவங்க கொடுக்கிற உயிர் காக்கும் சட்டை/மிதப்பங்கி(லைஃப் ஜாக்கெட்) மற்றும் தலைக்கவசம்(ஹெல்மெட்) போன்றவற்றை அணிந்து கொண்டு ஆறு பேர் செல்லும் படகில் ஏறி துடுப்பை கையில் வாங்கிய உடனேயே உற்சாகம் வந்துவிட்டது.
இந்த சாகச பயணத்தில் ஒருவர் நமக்கு பாதுகாப்பாகவும், வழிகாட்டியபடியும் படகை செலுத்தி கொண்டு வருகிறார். எந்த உபகரணங்களையும் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவரிடம் ஒரு புகைப்படக் கருவியை கொடுத்துவிட்டால் அல்லது நம்முடைய செல்போனை கொடுத்து விட்டால் அவர் நமக்குப் புகைப்படம் எடுத்துத் தருவார்.
நாங்கள் ஆறு பேர் செல்லும் படகை தேர்ந்தெடுத்திருந்தோம். ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அந்த படகில் ஏறும் போதே ஒரு ஆட்டத்துடன் தான் ஏற முடியும். ஏனெனில் இங்கு இதற்கு பயன்படுத்தப்படும் படகு காற்று ஊதி நிரப்பப்பட்ட “Inflatable craft” எனப்படும் படகு வகை.
அதனால் அதில் ஆடி ஆடி ஏறும்போதில் இருந்து தொடங்குகிறது நம்முடைய சாகசம். ஏறியவுடன் அனைவரின் உடல் பருமனை வைத்து படகின் சமநிலையைக் காக்கும் வண்ணம் இரண்டு பக்கமும் மூன்றும் மூன்று பேராக அமர வைக்கப்பட்டோம். துடுப்பைக் கொண்டு அவர் சொல்லும் படி படகை இயக்க வேண்டும்.

தண்ணீரில் நாமே படகை துடுப்புப் போட்டுக் கொண்டு போவது சந்தோஷமாக இருந்தது. “ஏலேலோ ஐலசா , ஏலேலோ ஐலசா” அப்படின்னு பாடிக் கொண்டே சாதாரணமாக போய்கொண்டு இருந்தோம்.
அந்த வழிகாட்டி அண்ணாவுக்கு தமிழ் தெரியாது. நமக்கு சுத்தமா கன்னடம் தெரியாது. ஆனா .இந்த மாதிரி சுற்றுலா தலங்களில் உள்ள வழிகாட்டிகள் தெரிந்து வைத்திருக்கும் தமிழை வைத்து எப்படியோ பேசிக் கொண்டோம்.
முதலில் மிகச் சாதாரணமாக சுற்றிலும் உள்ள காடு மரம் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு பார்த்துக் கொண்டே சென்றோம்.
சிறிது தூரம் தாண்டி கரை கண்ணுக்கு மறைந்து நன்கு உள்ளே சென்றதும் அடர்ந்த மரங்களின் இடையே படகு நிறுத்தப்பட்டது. எதற்காக இங்கு நிறுத்தி இருக்கிறார் னு பார்த்தோம் (சரி நமக்கு பழக்கம் இல்லாததுனால துடுப்பு போட்டதற்கு கொஞ்சம் ஓய்வு குடுக்குறாங்க போல அப்படின்னு நினைச்சோம்). அவரு, “யாருக்கெல்லாம் நீச்சல் தெரியும்” அப்படின்னு கேட்டார்.
இரண்டு பேருக்கு நல்லா தெரியும் போல. மத்தவங்களுக்கு ஓரளவு தெரியும் போல இருக்கு. எனக்கு நீச்சல் தெரியாது. இதுல சுமாரா தெரியும் னு சொன்ன ஒருத்தரை அந்த அண்ணா “ஜாலியா என்ஜாய் பண்ணுங்க” ன்னு சொல்லி தண்ணிக்குள்ள இறக்கி விட்டுட்டார் (கிட்டத்தட்ட தள்ளி விட்டுட்டார்). எதிர்பாரத அந்த நிகழ்வில் “ஓஓ” என்ற சந்தோஷ கூச்சல் போட்டவாறு வரிசையா ஒவ்வொருத்தரா தண்ணில குதிச்சுட்டோம். அப்பப்பா செம சூப்பர்!!!

தண்ணீரில் விளையாடுவது இயல்பாவே நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் ஓடுற ஆத்துல இறங்கின அனுபவமே கிடையாது. ஆற்றின் கரையோரமா நின்னு கால் நனைச்சு, இல்ல அம்மா ஊர்ல வயற்காட்டில் வாய்க்கால் தண்ணில, பம்பு செட்ல விளையாடி, எங்க ஊர் பெரியேரியில தண்ணி வரும்போது கரையோரத்தில் நின்னு தண்ணீர்ல விளையாடுற ஆள, கரை புரண்டு ஓடும் காவி ஆற்றின் நடுவில் இறக்கி விட்டால் எப்படி இருக்கும்???
“ஆஹாஹா ஓஹோஹோ” தான். பாரதியின் மழை பாட்டு ஒன்னு இருக்குல்ல
“திக்குகள் எட்டும் சிதறி – தக்க
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பாட்டுல வர்ற மாதிரி மனசுக்குள்ள ஒரே மத்தளம்தான், கும்மாளந்தான். தண்ணிக்குள்ளார குதிச்ச ஆரம்ப சந்தோஷ அதிர்ச்சி கடந்த பிறகு அதை அனுபவிக்க தொடங்கினேன்.
எப்படி??
நமக்கு நீச்சல் அடிக்க தெரியாது. நம்ம என்ன பண்ணலாம்?? தண்ணிக்குள்ளார சைக்கிள் ஓட்டுவது, குதிக்கிறது, நடனம் ஆடுவது, மற்றவர்கள் கைபிடித்து கொண்டு நீந்துவது, குப்புற படுத்து நீந்த முயற்சி செய்வது, வானம் பார்க்க தண்ணீரில் படுத்துக் கொள்வது, முக்கியமா மத்தவங்க மேல தண்ணீரை அள்ளித் தெளித்து வம்பு இழுப்பது (தண்ணீரில் விளையாடும் போது எப்பவுமே இதை பண்ணிடனும்… இல்லனா அந்த சம்பவம் முழுமை பெறாது).. என்று பல வகையில் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
நீச்சல் தெரிஞ்சவங்க எல்லாம் கொஞ்ச தூரம் நீந்தி நீந்தி போயிட்டு வந்தாங்க.. ஆசையா இருந்துச்சு. நமக்கு தெரிஞ்ச நீச்சல் வச்சு நம்ம எங்க போறது??

அதனால வானம் பார்த்து மிதக்க ஆரம்பிச்சு (அப்படி மிதப்பது ஒரு ஆனந்தம்) அப்படியே கண் மூடி ரசித்துக்கொண்டிருந்தேன். கடவுளுக்கு இந்த அனுபவத்துக்கு ஒரு நன்றி சொல்லி அவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது இடையூறா ஒரு குரல் “மேடம் அந்த பக்கம் போகாதீங்க, அந்த பக்கம் போகாதீங்க, இந்த பக்கம் வாங்க” அப்படின்னு.
யார சொல்றாரு அப்படின்னு கண்ணைத் திறந்துப் பார்த்தா என்னைத்தான் சொல்றாரு. நான் மிதந்து கொண்டே படகை விட்டு சற்று தள்ளி வந்துட்டேன் போல.
பிறகு என்னோட வந்தவங்க எங்கிட்ட வந்து என்னை கை பிடிச்சு படகுக்கு அருகில் அழைத்து வந்தார்கள்(நமக்கு தான் வர தெரியாதே..). “ஏன் மேடம் அந்த பக்கம் போனீங்க?? அங்க போக வேண்டாம்னு சொன்னேன் இல்ல” அப்படின்னு அவர் கேட்டார். “நானா போகலங்க…. தானா போனது…” அப்படின்னு சொன்ன உடனே எல்லாரும் சிரிச்சிட்டாங்க.
சரி எல்லாரும் சேர்ந்து பாட்டு பாடலாம் அப்படின்னு மழை பாட்டு, தண்ணி பாட்டு னு யோசிச்சு யோசிச்சு பாடிட்டு இருந்தோம். ஆனா ஒரு அதிசயத்தை பாருங்க எங்களுக்கே தெரியாம அமிர்தவர்ஷினி ராகத்திலேயே பாட்டு பாடிட்டோம் போலருக்கு. அத கேட்டு மேகமே மயங்கி, மழையே வந்துடுச்சு..
வாவ்!!!! சட சட சடன்னு வேகமா ஒரு நிமிஷம் பெய்துவிட்டு சட்டுனு அப்படியே குறைஞ்சி பூந்தூறலா ஒரு மழை. மாயாஜாலமா இருந்துச்சு.
ஆத்துக்கு நடுவுல நிற்கும்போது இதமா பூ மழை பொழிவது மாதிரி, நமக்கு வலிக்காம பெய்ற மழையை அனுபவிக்கிறது ஆனந்த அனுபவம்.

மகா சுகானுபவம். மழைப் பெய்ய ஆரம்பிச்ச உடனே இன்னும் குஷி ஆயிடுச்சு. பாட்டு இன்னும் அதிகமாயிடுச்சு. “வான் மேகம் பூப்பூவாய் தூவும்”, “ஓகோ மேகம் வந்ததோ”, “நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன்”, அப்படி இப்படின்னு மழையில நனைகிற பாட்டா பாடிட்டு இருந்தா மழை நின்னு போச்சு(ஓவரா பாடிட்டோம் போல).
அப்புறம் அங்க இருந்து படகு ஏறி ஒரு பாறை திட்டில் நிறுத்தி இறக்கி விட்டாங்க. கொஞ்ச நேரம் படகுல இருந்து இறங்கி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு, ஒரு அஞ்சு பத்து நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் பயணம் தொடங்கியது.
சாதாரணமா போயிட்டு இருக்குற மாதிரி தான் இருந்துச்சு. கொஞ்சம் வெயில் கூட வந்துச்சு. அப்புறம் உடனே வானம் இருட்டி கொஞ்சம் வேகமா மழையும் ஆரம்பிச்சிடுச்சு. வேகமான மழையின் இடையே நாங்களும் வேகமா வேகமா துடுப்பு போட்டோம். திடீர்னு பார்த்தா தண்ணீருக்கு நடுவில் கரடு முரடான பாறைகள்.
பாறைகள் நடுவில் உள்ள இறக்கத்தில் தண்ணீர் நுரைத்தள்ள பொங்கி பெருகிப் போய்க் கொண்டிருக்கிறது. சரி இப்படியே ஒரு “U” டர்ன் பண்ணிடுவாங்க போல இருக்கு, அந்த பக்கம் ரொம்ப இறக்கம் போல இருக்கு அப்படின்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள, இப்போ நான் சொல்ற மாதிரி வேகமா துடுப்பு போடுங்க, அந்தப் பாறைகளுக்கு நடுவுல படகை செலுத்தி அந்த பக்கம் இறங்கப்போறோம்னு சொன்னாரு.

மீண்டும் “ஆஹாஹா ஓஹோஹோ” தான். “வானம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு” மனதுக்குள் பாட்டு ஓடுது.
கொஞ்சம் செங்குத்தான பாறைகளின் நடுவில் இறங்கும்போது நதி நம் மீது தண்ணீரைக் கொட்டி(தெளித்து அல்ல) விளையாண்டது ஒரு அற்புதமான பரவச அனுபவம்.
நாம ஒருத்தர் மேல ஒருத்தர் தண்ணீரை அள்ளி வீசு விளையாடுவதை விட ஆறு நம்ம மேல தண்ணீரை கொட்டி நம்ம கூட விளையாடுறத விவரிக்க வார்த்தைகளே இல்லை. அனுபவிச்சா தான் அதை உணர முடியும்.
அந்த இடத்தில் பொங்கிப் பெருகி ஓடும் ஆற்றில் அப்படியே, தண்ணி நம்ம மேல தெறிக்கத் தெறிக்க இரண்டு ரவுண்டு படகை சுத்த விட்டார் அந்த அண்ணா. பஞ்சபூதங்கள்ள மூணு(வானம், நீர், காற்று) படு பயங்கர பரவச நிலையை நமக்கு கொடுத்தது. மென்மை, மிதமான வேகம், கொஞ்சம் அதிக வேகம், மிக அதிகமான வேகம், கரடு முரடான பாறைகளுக்கு நடுவில் பாய்ந்து ஓடும் வெள்ளம் என காவிரியின் பலவிதமான முகபாவனைகளை தரிசித்த பரவச அனுபவத்தோடு கரையை வந்தடைந்தோம்.

கரையில் நின்று இறங்கி திரும்பி ஆற்றை நோக்கி மானசீகமாக பேரன்புடன், புன்னகையுடன், பெருவணக்கம் செலுத்தி, அது இன்று கொடுத்த பேரின்ப பெரும் பரவச அனுபவத்திற்கும், எங்களுடன் சேர்ந்து விளையாடியதற்கும், அனைத்திற்கும் மனதார ஒரு நன்றி சொல்லிவிட்டு காவிரியிடமிருந்து விடை பெற்றோம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.