பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
Travel Contest : கால்பந்து காதல், நிதானமான மக்கள், மயக்கும் உணவு! - போர்ச்சுகல் கொடுத்த அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்தாண்டு தொடக்கத்தில் நண்பர்களோடு போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பன் நகரத்துக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த முதல் வெளி நாட்டுப் பயணி வாஸ்கோடகாமா.
அவர் இந்தியாவுக்கு வருவதற்குக் கடல் வழியைக் கண்டடைந்த பிறகுதான் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான கடல் வழி வணிகப் போக்குவரத்து வேகமெடுத்தது. துணிச்சலோடு ஒரு வரலாற்றுப் பயணத்தை நிகழ்த்திக் காட்டிய வாஸ்கோடகாமா பிறந்த போர்ச்சுக்கல் நாட்டுக்குச் செல்கிறோம் என்ற நினைப்பே சிலிர்ப்பூட்டியது.

விமானம் லிஸ்பன் நகரத்தில் தரையிறங்கியதும் குடியுரிமைப் பரிசோதனைக்காக மிக நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாகக் காத்திருந்தோம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குத் தனியாகவும் பிற நாட்டுப் பயணிகளுக்குத் தனியாகவும் பரிசோதனைகள் நடந்தன.
நாங்கள் நின்றிருந்த வரிசையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தனர். இடையிடையே சில இந்தியர்களும். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சற்று மேலே போர்ச்சுக்கல் அமைந்திருப்பதால் அவர்களை ஆப்பிரிக்கப் பயணிகள் என்றுதான் முதலில் நினைத்தோம்.
ஆனால் அவர்கள் அனைவரும் தென்னமெரிக்க நாடான பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது சில நாள்களுக்குப் பிறகுதான் எங்களுக்குப் புரிந்தது.
உலகெங்கிலும் இருநூற்றெண்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போர்த்துக்கீசிய மொழியைப் பேசுகின்றனர். அவர்களுள் இருநூறு மில்லியன் பேர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள். லிஸ்பன் நகரில் தங்கும் விடுதிகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பணியிலிருக்கின்றனர்.
தென்னமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பன்னிரண்டு நாடுகளில் போர்த்துக்கீசிய மொழிதான் அலுவலக மொழியாக இருக்கின்றது. பிரேசில் நாட்டின் அலுவலக மொழியாகவும் போர்ச்சுக்கீசிய மொழியே இருக்கிறது.

பிப்ரவரி மாதம் அங்கே கடுமையான குளிர்காலம். எச்சரிக்கை உணர்வோடே எங்களுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தோம். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் உள்ளங்கைகள் சில்லிட்டன.
ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடான போர்ச்சுக்கல் ஐரோப்பியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கிறது. துறைமுகத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான போர்ட் என்பதுதான் போர்ச்சுக்கல் என்ற பெயருக்கான வேர்ச்சொல். போர்ச்சுக்கல் நாட்டின் இரண்டாவது பெரிய தொழில் நகரம் ‘போர்ட்டோ’வும் இதே காரணத்துக்காகப் பெயர் பெற்றது.
அட்லாண்டிக் கடற்கரையோரம் ஏழு மலைகளின் மீது கட்டப்பட்டிருக்கும் லிஸ்பன் நகரம் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக இருக்கிறது. மலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அரசும் பொதுமக்களும் பழமையான கட்டடங்களைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகின்றனர்.

வாஸ்கோடகாமா தனது குழுவுடன் கடல் வழியாகத் தனது பயணத்தைத் தொடங்கிய பெலம் எனும் இடம் லிஸ்பன் நகரத்துக்கு அருகிலேயே இருக்கின்றது. அந்த இடத்திற்குப் பக்கத்திலேயே எங்களுடைய தங்கும் விடுதியும் அமைந்திருந்தது தற்செயலாக நடந்தது.
சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் டேகோஸ் நதி அட்லாண்டிக் கடலில் சங்கமிக்கும் காட்சிகளைக் காண்பது குமரியில் சூரிய உதயத்தைக் காண்பதற்கு நிகர்த்தது. அந்தக் காட்சிகளை அங்கிருந்த ஒவ்வொரு நாளும் நாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியிலிருந்தே ரசிக்க முடிந்தது இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிவிட்டது.
ஒரு மாலை நேர நடைப்பயணத்தின்போது பெலம் கடற்கரைச் சாலையின் இடதுபுறத்தில் இருட்டுக்கடை அல்வா வாங்க நிற்பதைப் போன்று பெருங்கூட்டத்தை ஒரு கடை வாசலில் பார்த்தோம். அது Pastéis de Belém என்னும் பாரம்பரிய இனிப்பு வகையை விற்கும் புகழ்பெற்ற கடை.
முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து தயாரிக்கப்படும் சுவைமிகுந்த இந்த இனிப்பு வகைக்கு இருநூறு வருடங்கள் வரலாறு இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெலம் பகுதியில் ஒரு மடாலயத்தையொட்டி கரும்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது.

1820ஆம் ஆண்டு தொடங்கிய தாராளவாத புரட்சியின் விளைவாக அந்தப் பகுதியிலிருந்த மடாலயங்கள் மூடப்பட்டு மதகுருமார்களும் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது மடாலயத்தில் இருந்த ஒருவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக ஒருவகையான இனிப்பு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
அன்றைக்கு லிஸ்பன் நகரத்திலிருந்து பெலம் பகுதிக்கு நீராவிப் படகுகள் வழியாகவே வரமுடியும். அங்கிருந்த மடாலயத்தின் பிரம்மாண்டமும் பெலம் கோபுரமும் படகுச் சவாரியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தது போலவே இந்த இனிப்பு வகையும் பிரபலமாகத் தொடங்கியது.
இன்னும் இந்த இனிப்பைத் தயாரிக்கும் செயல்முறையைக் காலங்காலமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ரகசியமாக வைத்திருப்பதாகப் போர்ச்சுக்கீசிய நண்பர்கள் நம்புகின்றனர். அந்த இனிப்பின் ருசியில் மயங்கியிருந்த நாங்கள் அவர்களுடைய நம்பிக்கையில் கல்லெறிய விரும்பவில்லை.

நகருக்குள் எந்த இடத்துக்கும் அதிக பட்சமாக அரை மணி நேரத்தில் சென்றுவிடும் அளவுக்குச் சிறிய ஊர் லிஸ்பன். பல பெரிய வணிக வளாகங்கள் நகரெங்கும் அமைந்திருக்கின்றன. லிஸ்பன் நகருக்குச் சற்று வெளியில் அமைந்திருக்கும் சுமார் பதினோரு மைல் நீளம் கொண்ட வாஸ்கோடகாமா பாலம்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய பாலம். பழமையான கட்டடங்கள் நிறைந்த சிண்ட்ரா, கேஸ்கெய்ஸ் போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
தெருக்களில் நாம் கிரிக்கெட் விளையாடுவதைப் போல இங்கே கால்பந்து விளையாடுகின்றனர் சிறுவர்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கால்பந்து விளையாட்டைப் பற்றிய செய்திகளைப் பேசிக்கொண்டே இருக்கின்றனர் உள்ளூர்வாசிகள். லிஸ்பன் நகரத்திலிருக்கும் பென்ஃபிகா கால்பந்து மைதானத்தில் நடக்கும் கால்பந்துப் போட்டிகளைத் தவறவிடக் கூடாது எனச் சொன்ன போர்ச்சுக்கீசிய நண்பர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

சுமார் அறுபதாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மிகப்பெரிய மைதானம் எப்போதும்போல அன்றும் நிரம்பி வழிந்தது. அனுபவித்ததால் சொல்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஐரோப்பாவின் ஏதாவது ஒரு மைதானத்தில் நடக்கும் கால்பந்து விளையாட்டை நேரில் பார்த்து விடுங்கள்.
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ பிறந்த ஃபஞ்சல் (Funchal) நகரத்தைப் பார்த்துவிட நினைப்பவர்கள் லிஸ்பனிலிருந்து கடல் வழியாகவோ வான் வழியாகவோ போர்ச்சுக்கல் நாட்டுக்குட்பட்ட மதீரா தீவுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
சாலையில் பயணப்படும் யாருக்கும் எந்த அவசரமும் இல்லை. நின்று நிதானமாக எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு பொறுமையாகச் செல்கின்றனர்.
நடந்து செல்லும் பாதசாரிகளுக்கே சாலையில் எப்போதும் முன்னுரிமை. பொறுமை என்றவுடன் இந்தச் சம்பவத்தையும் சொல்லியாக வேண்டும். அன்றைக்கு லிஸ்பன் நகருக்கு வெளியே அமடோராவில் இருக்கும் எங்களுடைய அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தோம்.
மேசையிலிருந்த கணினித்திரை சற்றே ஆட்டம் கண்டது. உணரத்தக்க அளவிலான நிலநடுக்கத்தை எந்தப் போர்த்துக்கீசிய நண்பர்களும் உணரவில்லை என்பது எங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

நடந்ததைச் சொன்னவுடன் கூகுள் செய்து பார்த்துவிட்டு ஆமாம் மெதுவான நிலநடுக்கம் எனச் சொல்லிவிட்டு அவரவர் வேலையைத் தொடர்ந்தனர். லிஸ்பனில் மட்டுமே அறுபதாயிரம் பேர் இறக்கக் காரணமான மிகப்பெரிய நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமி என்னும் பேரலைத் தாண்டவமும் நடந்த ஆண்டு 1755.
இந்திய உணவுகள் குறிப்பாகத் தென்னிந்திய உணவுகள் லிஸ்பனில் கிடைப்பது அரிது. மார்டிம் மோனிஸ் சதுக்கம் என்ற பகுதியில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் வணிகம் செய்கின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் குறுக்குச் சந்துகள் வட இந்திய நகரங்களை நினைவூட்டுவதாக இருக்கின்றன.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீனா என்ற நண்பர் லிஸ்பனில் Feast of Madras என்னும் உணவு விடுதியை நடத்துகிறார்.
போர்ச்சுக்கல் தமிழ்ச்சங்கத் தலைவர் சண்முகம் அவர்களை லிஸ்பனில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுக்கீசு மொழியைச் சரளமாகப் பேசும் அவர் அயர்லாந்து தலைநகர் டப்ளினிலும் வணிகம் செய்கிறார். அவர் மூலமாக தஞ்சாவூரைச் சேர்ந்த நண்பர் லிஸ்பனில் நடத்தும் Spring Tomato என்ற இத்தாலிய உணவகமும் அறிமுகமானது.

சண்முகமும் தீனாவும் தான் போர்ச்சுக்கல் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து உயர்ப்போடு செயல்படுவதற்கான காரணமாக இருக்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் போர்ச்சுக்கலில் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிடப் பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவருடைய உடலை மீட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அந்த அனுபவம் தான் சங்கம் உருவாகக் காரணம் என்பதை அவருடைய பேச்சின் ஊடாக நாம் புரிந்துகொண்டோம். மற்றபடி தமிழுக்கும் போர்ச்சுக்கலுக்கும் இன்னொரு தொடர்பும் உண்டு. போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் தான் தமிழின் முதல் புத்தகம் 1554ஆம் ஆண்டு வெளியானது.
லிஸ்பன் நகரத்திலிருந்து போர்ட்டோ முந்நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. காரில் பயணித்தால் மூன்று மணி நேரத்தில் சென்றுவிட முடியும். ஆனால் போர்ட்டோவுக்குப் போகிற வழியில் இருக்கும் ‘நசாரே’வும் ஃபாத்திமா தேவாலயமும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.
நசாரே கடற்கரை அதனுடைய அதியுயர அலைகளுக்காகப் புகழ்பெற்றது. இந்தக் கடற்கரையிலெழுந்த எண்பத்தாறு அடி உயர அலைகள் உலக சாதனையாகப் பதிவாகியிருக்கிறது. நசாரேவில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உயரப்பாயும் இந்த அலைகளை அயராமல் கண்டு ரசிக்க முடியும்.

மத்தியப் போர்ச்சுக்கலில் இருக்கும் விவசாய நகரம் ஃபாத்திமா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இயேசு கிறிஸ்துவின் தாயாரான மேரியைக் கண்டதாக மூன்று சிறுவர்கள் ஊர்ப்பெரியவர்களிடம் சொல்ல, இன்றுவரை இந்த இடம் மதச் சுற்றுலாவுக்குச் சிறப்பிடமாகத் திகழ்கிறது.
பிரம்மாண்டமான தேவாலயமும் அங்கு ஒலிக்கும் மணியோசையும் கடவுள் நம்பிக்கை கொண்ட யாருக்கும் ஓர் அதிர்வை உண்டாக்கும் என்பதை நாங்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தோம். மண்டியிட்டவாறே தேவாலய வளாகத்தில் நடந்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.
போர்ட்டோ நகரம் போர்ச்சுக்கலின் இரண்டாவது பெரிய தொழில் நகரம். வடமேற்குப் பகுதியிலிருக்கும் கடற்கரை நகரம் இது. உலகப் புகழ்பெற்ற ஜாரா என்னும் ஆடை விற்பனையகத்தை அதன் உரிமையாளரான அமன்சியோ ஒர்டேகா சர்வதேச வணிகமாக மாற்ற நினைத்தபோது அவர் தேர்வு செய்தது இந்த போர்ட்டோ நகரத்தைத்தான்.

டோரோ நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரம் ஒயின் உற்பத்திக்குப் பெயர் பெற்றது. நதிக்கரை ஓரமாக ஒரு மாலை நேரத்து மெல்லிய நடைப் பயணம் உங்களுடைய சோர்வைப் போக்கும் வல்லமை பெற்றது. அதற்கு நானே சாட்சி.
உலகளவில் கார்க் (Cork) எனப்படும் தக்கைகள் போர்ச்சுக்கலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் திராட்சைகளும் ஆரஞ்சுப் பழங்களும் சுவை மிக்கவை.
ஐரோப்பிய நாடுகளிலேயே செலவு குறைவான நாடு போர்ச்சுக்கல். அதனாலேயே பெரும்பாலான ஐரோப்பியர்கள் தங்களுடைய ஓய்வுக் காலத்தை இங்கே செலவிட விரும்புகின்றனர். செங்கன் நாடுகளில் ஒன்றான போர்ச்சுக்கல் தான் ஐரோப்பாவுக்குப் புலம்பெயர விரும்புகிறவர்களின் புகலிடமாக இருக்கிறது.
-அ. பாண்டியராஜன்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.