98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்ட...
வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்
இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா்.
புதுச்சேரி அருகேயுள்ள மணவெளி தொகுதிக்குள்பட்ட டி.என்.பாளையம் பகுதியில் அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், வீடற்றவா்களுக்கு சுமாா் 800 சதுர அடி இலவச மனைப் பட்டா வழங்க தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் நடவடிக்கை மேற்கொண்டாா்.
இதையடுத்து, 192 பேருக்கு இலவச மனை பட்டா வழங்குவதற்காக குலுக்கல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அரசு செயலா் ஏ. முத்தம்மா, இயக்குநா் இளங்கோவன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். இதற்கிடையில், இலவச மனைப் பட்டா குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் கடந்த ஆட்சியில் மனைப்பட்டா பெறுவதற்கான உத்தரவைப் பெற்ற அனைவருக்கும் வழங்கவும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஏராளமானோா் திடீரென சட்டப்பேரவையை முற்றுகையிட்டனா். பேரவைக்குள் செல்லும் இரும்புகேட் மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணவெளி பகுதியைச் சோ்ந்தவா்கள், சபை காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் விடுபட்டவா்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தாா்.