Goa: அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
கோவாவில் உள்ள சிர்காவ் என்ற இடத்தில் ஸ்ரீ லைராய் தேவி கோயில் வருடாந்திர திருவிழா நேற்று இரவு நடந்தது. இத்திருவிழாவிற்காக கோவா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்வாக தீ மிதி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிலர் தீயில் அமர்ந்து பிரார்த்தனை செய்வதுண்டு. இரவு முழுவதும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.

அத்திருவிழாவை காண பக்தர்கள் திரளாக கூடி இருந்தனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
இதையடுத்து பாதுகாப்புப்பணியில் ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது.
பக்தர்கள் தீமிதி திருவிழா நடக்கும் இடத்தில் கூடி இருந்தனர். அங்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்கள் முண்டியத்துக்கொண்டு ஓடினர். பக்தர்களால் தப்பிச்செல்ல முடியாமல் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டாக்டர்கள் பிற மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் நிறுத்தப்பட்டு இருந்தபோதிலும் கூட்டத்தை சரியாக நிர்வகிக்க முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் பிரமோத் சாவந்த் நேரிசல் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திடீரென ஏற்பட்ட மின்தாக்குதல் இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்கலாம் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.