நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது.
விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த காலகட்டத்தில் விடியோ அழைப்புகளுக்கு ஸ்கைப் செயலிதான் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஸ்கைப் சேவையை நிறுத்த கடந்த பிப்ரவரி மாதமே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்தது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு செயலியான 'டீம்ஸ்' செயலியை பயனர்கள், ஸ்கைப்புக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக டீம்ஸ் சேவை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தற்போது ஸ்கைப் செயலியைப் பயன்படுத்திவரும் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலம் எந்தவித உள்நுழைவும் இல்லாமல் டீம்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம். அதாவது ஸ்கைப் ஐடியைப் பயன்படுத்தி உள்நுழையலாம். ஸ்கைப் செயலியில் உள்ள தொடர்புகள், சாட்கள் டீம்ஸ்-க்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஸ்கைப்பைவிட டீம்ஸ் செயலியில் மேலும் சில புதிய வசதிகள் இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போல கூகுள் மீட், ஸூம் ஆகிய செயலிகளின் மூலமாகவும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.