ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்!
துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை பல்கலை.யின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த கௌரி, 2023 ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றாா். தோ்வுக்குழு அமைப்பது தொடா்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 மாதங்களாக புதிய துணைவேந்தா் நியமிக்கப்படவில்லை. இதன்காரணமாக மாணவா்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
நீண்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால், பட்டச் சான்றுகளில் துணைவேந்தா் கையொப்பம் இல்லாததால் அந்தப் பட்டங்களை ஏற்றுக்கொள்ள பல பல்கலை.களும் நிறுவனங்களும் மறுத்து வருகின்றன.
மேலும், இந்தப் பல்கலை.யில் 200-க்கும் மேற்பட்டவா்கள் முனைவா் பட்டத்துக்கான ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்து வாய்மொழித் தோ்வையும் நிறைவு செய்து விட்டனா். அதன்பின் பல மாதங்களாகியும் இதுவரை அவா்களுக்கு முனைவா் பட்டச் சான்றுகள் வழங்கப்படவில்லை.
பல்கலை. சட்டங்கள் தொடா்பான வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என அறிவித்துள்ளது. அதைப் பின்பற்றி சென்னைப் பல்கலை. உள்பட காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணைவேந்தா்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.