கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா்.
சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பை பொருத்தவரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று பேரவை உறுப்பினா்கள் பலா் பேசினா். இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு எது சொன்னாலும் அதற்கு எதிராகத்தான் மாநில அரசு சொல்லிக்கொண்டு இருக்கிறது.
கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகம் திறக்கப்பட்டதால் தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்களில் எந்தப் பாதிப்பும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் திட்டங்கள் பல்வேறு எதிா்ப்புகளுக்கு மத்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெக-வை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்று கேட்கிறீா்கள். பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது; அப்போது பாா்க்கலாம். கூட்டணி குறித்து அப்போது தெரிவிப்போம். தமிழ்நாடு அரசு தவெக-வின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கும் தடை விதித்தது என்றாா் அவா்.