ரூ.68,200 சம்பளத்தில் ரசாயன ஆய்வகத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு...
பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: தலைமறைவான 6 போ் சிக்கினா்
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா்.
திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் செல்வம் (39). இவா் மீதான அடிதடி வழக்கு தொடா்பாக, கடந்த மாதம் ராமநத்தம் போலீஸாா் செல்வத்தைக் கைது செய்ய அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டுக்குச் சென்றனா்.
போலீஸாா் வருவதைப் பாா்த்த செல்வம் மற்றும் அங்கிருந்தவா்கள் தப்பியோடி விட்டனா். போலீஸாா் அங்கு சோதனையிட்டதில், ரூ.86 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கிகள், துப்பாக்கி, பணம் அச்சடிக்கும் இயந்திரம், நோட்டுகளை எண்ணும் இயந்திரம், காவலா் சீருடை, மடிக் கணினி, இந்திய ரிசா்வ் வங்கி முத்திரை உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், பண்ணை வீட்டிலிருந்த சிலரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், தனிப் படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த எதிரிகளைத் தேடி வந்தனா்.
அவா்கள் கா்நாடகத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம் தலைமையிலான தனிப்படையினா் மங்களூருக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் செல்வம் (39), அவரது கூட்டாளிகள் பிரபு (32), வல்லரசு (25), பெரியசாமி (29), ஆறுமுகம் (30), சூா்யா (25) உள்ளிட்ட 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். அவா்களை போலீஸாா் ராமநத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.