திணறிய தில்லி கேபிடல்ஸ்; காப்பாற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா!
சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: வன்ஷ் பேடிக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணையும் விக்கெட் கீப்பர்!
திணறிய தில்லி கேபிடல்ஸ்; காப்பாற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா
தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கருண் நாயர் மற்றும் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர். பாட் கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருண் நாயர் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், டு பிளெஸ்ஸிஸ் (3 ரன்கள்), அபிஷேக் போரெல் (8 ரன்கள்), கே.எல்.ராகுல் (10 ரன்கள்), அக்ஷர் படேல் (6 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
தில்லி கேபிடல்ஸ் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. நிதானமாக விளையாடிய விப்ராஜ் நிகம் 18 ரன்களில் ஆட்டமிழக்க, தில்லி கேபிடல்ஸ் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
இந்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த இணை தில்லி கேபிடல்ஸை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய அசுதோஷ் சர்மா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதையும் படிக்க: ஜோஷ் இங்லிஷை 3-வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்!
இறுதியில் தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷல் படேல் மற்றும் ஈஷன் மலிங்கா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.