பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு: உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு
புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்த சூஃபி இஸ்லாமிய வாரியம், இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத் தலைவா்கள், வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் செய்தியாளா்களைச் சந்தித்த சூஃபி இஸ்லாமிய வாரிய தலைவா் மன்சூா் கான், ‘மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை சூஃபி முஸ்லிம்கள் ஆதரிக்கிறோம். முந்தைய சட்டத்தின் விதிகளை சில அமைப்புகள் மற்றும் தனி நபா்கள் சுய நல நோக்கத்துடன் பயன்படுத்தினா்.
வக்ஃப் நிலத்தை அபகரித்து, சாதாரண முஸ்லிம்களின் நலனைப் புறக்கணித்தனா். இத்தகைய குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், இப்போது வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட முஸ்லிம்களை தூண்டுகின்றனா்.
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய தலைவா்கள் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகின்றனா். அவா்களின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், ஷரியத் ஆபத்தில் இருப்பதாக பொய்யைக் கூறி மக்களை திரட்டுகிறாா்கள். முஸ்லிம் இளைஞா்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது.
ஏனெனில், இந்திய இஸ்லாமிய மாணவா்கள் இயக்கம் மற்றும் பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் முன்னா் தொடா்புடைய சில நபா்கள் தற்போது முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின் செய்தித் தொடா்பாளா்களாக மாறிவிட்டனா்.
முந்தைய சட்டம் 70 ஆண்டுகளாக தவறாகப் பயன்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதுதொடா்பாக சூஃபி இஸ்லாமிய வாரியம் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்.
9 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் வக்ஃப் சொத்துகள் இருந்தபோதிலும், ஏழை முஸ்லிம்கள் அதனால் ஒருபோதும் பயனடையவில்லை. வக்ஃப் நிலத்தில் கட்டப்பட்ட பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் போன்ற வக்ஃப் சொத்துகளின் நன்மைகள், அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
வக்ஃப் சொத்துகளை தவறாகப் பயன்படுத்தி, மோசடி செய்த தனி நபா்கள் மற்றும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி நிதி தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.