Operation Sindoor: `பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமானது’ - ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கும் பாதுகாப்புத்துறை|Live
ஆபரேஷன் சிந்தூர்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் எனும் சுற்றுலா தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை என இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

அதே நேரம், இரு நாட்டின் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுமையான வார்த்தைப்போர் நடந்தது. இந்த நிலையில்தான் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் , பாகிஸ்தானின் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாதக் குழுக்களில் தலைமையகங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
விளக்கும் மத்திய அரசு:
இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறையின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமானர் வியோம்கா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ``ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமானது. லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். ஜம்மு - காஷ்மீரின் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதுதான் பஹல்காம் தாக்குதல். குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.”
தாக்குதல் நடத்தியதை பிரதமர் மோடியிடம் தெரிவிக்குமாறு தீவிரவாதிகள் கூறியிருக்கின்றனர். பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித் தனமானது. இந்தத் தாக்குதல் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்தத் தாக்குதலுக்கு the Resistance Front என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புகள் இதன் மூலம் நிறுவப்பட்டன.” எனத் தெரிவித்தார்.