ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?
ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி எனத் தீவிரவாதக் குழுக்களின் 9 முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

2016-ல் உரி தாக்குதலுக்கு பதிலடி:
இந்தத் தாக்குதலுக்கு முன்பாக 2016-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் உள்ள உரி என்ற இடத்தில் இராணுவ முகாமுக்குள் புகுந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் கைக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 19 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பல தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ராணுவ ஆதரவுள்ள இடங்கள் என 6 முதல் 10-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.
2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி:
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு இந்திய அரசு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. 2019-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் (CRPF) சென்ற வாகனத்தின் மீது 100 கிலோ வெடி மருந்துடன் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இதற்கு பதிலடிதரும் விதமாக இந்தியா பாலகோட் பகுதியில் உள்ள ஜைஷ் முகாம்களை விமானப்படையின் வழியாக தாக்கி அழித்தது. மேலும் இந்தத் தாக்குதலில் 200–300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உளவுத்துறை கூறியது.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்து, “யாரும் இறக்கவில்லை, வெறும் காட்டில் குண்டு வீசப்பட்டது” எனக் கூறியது. சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளும் பாதிப்புகள் குறித்த தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை. அதே நேரம், பாலகோட் தாக்குதல் இந்தியாவின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான வான்வழித் தாக்குதலாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான வலுவான எச்சரிக்கையாகவும் கருதப்பட்டது குறிப்பிடதக்கது.