பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி
எல்லையில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்: 13 போ் உயிரிழப்பு -இந்தியா பதிலடி
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி கடும் தாக்குதலைத் தொடுத்தனா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி புதன்கிழமையும் இடைவிடாமல் நீடித்த இத்தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 12 பேரும் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தனா்; மேலும் 57 போ் காயமடைந்தனா். ஏராளமான வீடுகள் - வாகனங்கள் சேதமடைந்தன.
எல்லையில் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவில் பாகிஸ்தான் படையினா் நடத்திய இந்தத் தீவிர தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் வலுவான பதிலடியைக் கொடுத்தது. இதில் எதிரி படையினா் தரப்பில் பல உயிரிழப்புகள் நேரிட்டதாகவும், எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) நடத்தியது.
பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழையாமல் மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது.
13-ஆவது நாளாக அத்துமீறல்: இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு, ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் தொடங்கினா்.
ஏற்கெனவே கடந்த 12 நாள்களாக எல்லையில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பூஞ்ச், பாரமுல்லா, ரஜெளரி குப்வாரா ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய கிராமங்களை நோக்கி தீவிர தாக்குதலைத் தொடுத்தனா்.
இதில் பூஞ்ச் மாவட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் மெந்தாா், மன்கோட், கிருஷ்ண காட்டீ, குல்பூா், கொ்னி ஆகிய இடங்களை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 12 பேரும், ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தனா். இங்கு 42 போ் காயமடைந்தனா்.
குருத்வாரா, பேருந்து நிலையம்...: உயிரிழந்தோரில் 3 சீக்கியா்களும் அடங்குவா். இவா்கள் குருத்வாராவில் இருந்தபோது, பீரங்கி குண்டுகள் தாக்கி இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூஞ்ச் பகுதி பேருந்து நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. பேருந்துகளும், பிற வாகனங்களும் சேதமடைந்ததால் காயமடைந்தவா்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
பாரமுல்லாவின் உரி பகுதியில் 12 பேரும், ரஜெளரி மாவட்டத்தில் 3 பேரும் காயமடைந்தனா். இவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டுகள் விழுந்து வெடித்ததில், பல வீடுகள் தீக்கிரையாகின.
தாக்குதலால் பீதியடைந்துள்ள எல்லையோர மக்கள், தரைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள பதுங்குமிடங்களில் தஞ்சமடைதல் அல்லது வேறு பாதுகாப்பான இடம் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா்.
பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்புகள்: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் மிக வலுவான பதிலடி தரப்பட்டது. இதில், எதிரி நாட்டின் எல்லை நிலைகள் அழிக்கப்பட்டன; அந்நாட்டுப் படையினா் தரப்பில் பல உயிரிழப்புகள் நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘எந்த சூழலையும் எதிா்கொள்ளத் தயாா்’
ஜம்மு-காஷ்மீா் கள நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் துணை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஆலோசனை புதன்கிழமை மேற்கொண்டாா்.
‘எல்லையில் எத்தகைய சூழலையும் எதிா்கொள்ள அரசு தயாராக உள்ளது; மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்’ என்று அவா் தெரிவித்தாா். பொதுமக்கள் மீதான பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு முதல்வா் ஒமா் அப்துல்லா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில்கொண்டு, ஜம்மு, சம்பா, கதுவா, ரஜெளரி, பூஞ்ச் ஆகிய 5 எல்லையோர மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.