செய்திகள் :

திராவிடத்துக்கும் பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? சுவாரசியமான வரலாறு!

post image

திராவிடத்துக்கும் மேற்கு பாகிஸ்தனிலுள்ள பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? என்பதைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றை விரிவாகப் பார்க்கலாம்.

பலூசிஸ்தான் - இருபதாண்டுகளுக்கும் மேலாக செய்திகளில் இடம் பெற்ற ஒரு சொல். பாகிஸ்தானுக்கு தலைவலியாக இருந்து கொண்டிருக்கும் பலூசிஸ்தான் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு. வரலாற்றிலும் சரி, இன்றும் சரி, பலூசிஸ்தான் மிகவும் ஏழ்மையான, வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்று.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்தப் பகுதிதான் பாகிஸ்தானிலேயே மிகவும் குறைந்த கல்வியறிவு விகிதம், அதிகளவில் பிறக்கும் குழந்தைகளின் மரணம் மற்றும் அதிக வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது.

தற்போது பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பகுதி, ஆரியர்களின் படையெடுப்பிற்கு முன்பே மக்கள் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது. உள்ளபடியே இந்தப் பகுதி திராவிடச் செல்வாக்கைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திற்கு முன்பே பலூசிஸ்தான் ஒரு சிதறடிக்கப்பட்ட சமூகம் என்று பலர் கருதுகின்றனர். 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், நசீர் கான் என்ற தலைவர் பலூசிஸ்தான் பழங்குடியினரை ஒன்றிணைத்து, இப்பகுதியில் முதல் நிர்வாக அமைப்பை நிறுவி, 25,000 பேர் கொண்ட ராணுவத்தை திரட்டியதாக பலூச் புராணங்கள் கூறுகின்றன.

இந்த அமைப்பு காலப்போக்கில் உடைந்து, பலூச் பழங்குடியினருக்கும் அண்டை பகுதிகளான பஷ்டூன்கள் மற்றும் பஞ்சாபியர்களுக்கும் இடையிலான மோதல்கள் இந்தப் பகுதியை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கின.

இதே நூற்றாண்டின் இறுதியில், படையெடுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பலூசிஸ்தானை ஏழு பகுதிகளாகப் பிரித்து, ஆப்கானிஸ்தானுக்குள் நுழையவும், அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறவும் வசதி செய்தனர்.

1884 ஆம் ஆண்டு, பலூசிஸ்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. ஆனால், பலூசிஸ்தானை ஏழு பகுதிகளாகப் பிரித்த பிரிட்டிஷ் நடவடிக்கை, பலூச் பழங்குடியினரிடையே பிரச்சினைகளை அதிகரித்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தபோதும், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் துறையின் வளர்ச்சி மற்ற பகுதிகளைவிட மிகக் குறைவாகவே இருந்தது. 21 ஆம் நூற்றாண்டிலும்கூட, இந்தப் பகுதி அந்த பரிதாபகரமான சூழ்நிலையிலிருந்து மீள முடியவில்லை.

பாகிஸ்தான் விடுதலை பெற்ற நேரத்தில் பலூசிஸ்தான் தனி நாடாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பல பலூச் தலைவர்கள் விரும்பினர். இருப்பினும், ஒரு சுதந்திர நாடாக மாறக்கூடிய அளவில், பல்வேறு பலூச் பழங்குடி குழுக்களிடையே ஒருங்கிணைப்பு சாத்தியமாகவில்லை. எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு பலூசிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, பலூச் மக்களுக்கு நிர்வாக அமைப்பில் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை - அது அரசு நிர்வாகம் என்றாலும் சரி, ராணுவமாக இருந்தாலும் சரி. இந்தப் பகுதியில் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்ட பஞ்சாப் மாகாணத்தின் வலுவான செல்வாக்கு ஏற்கெனவே இருந்தது.

பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்ட போதிலும், பலூசிஸ்தானின் பின்தங்கிய நிலை மாறவில்லை. இயற்கை வளங்கள் நிறைந்த இந்தப் பகுதி, முற்றிலுமாக சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது, ஆனால், அதனால் கிடைக்கும் நன்மைகள் எல்லாம் காலனித்துவ காலத்திலிருந்தே நீடித்து வருவது போல, இப்பகுதியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை.

அரசின் ஒற்றையாட்சித் திட்டம், பலூச் தேசியவாதிகளை பெரிதும் கோபப்படுத்தியவொன்று. தேசிய அளவில் பலூச் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து மாகாண சட்டமன்றத்தின் தன் அதிகாரத்தையும் இது குறைத்தது. இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்தபோதிலும், பாகிஸ்தான் அரசாங்கம் 1958 ஆம் ஆண்டுக்குள் அதைக் கொடூரமாக அடக்கியது. பலூச் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீண்ட காலமாக, பலூசிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு பிரதேசமாக கருதப்படுவதைவிட பாகிஸ்தானின் காலனியாகவே கருதப்பட்டது. ஆட்சியோ பஞ்சாபிகள் உள்பட பலூச் அல்லாதவர்களின் கைகளில்தான் இருக்கிறது.

1970 ஆம் ஆண்டுதான் இப்போதிருப்பதைப் போன்ற புவியியல் பரப்பில் பலூசிஸ்தான் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு, முதல் தற்காலிகத் தேர்தல்கள் மீண்டும் அங்கு நடத்தப்பட்டன. பாரம்பரிய கட்சியான தேசிய அல்-வாமி கட்சி (NAP) வெற்றி பெற்றது. 1973 ஆம் ஆண்டு ஸுல்பிகர் அலி பூட்டோவின் பாகிஸ்தான் அரசாங்கம், வெளிநாட்டு நாடுகளுடன் சதி செய்வதாகக் குற்றம் சாட்டி, இந்த இடைக்கால அரசைக் கலைத்தது. அடுத்த நான்கு ஆண்டுகள் இரத்தக்களரிப் போராட்டமாக இருந்தன. பாகிஸ்தானுக்கும் பலூசிஸ்தானுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இரு தரப்பிலும் சுமார் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வங்கதேசம் உருவானது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழக்கூடாது என்று வலியுறுத்தி, பாகிஸ்தான் இராணுவம், பலூசிஸ்தான் எழுச்சியைக் கொடூரமாக அடக்கியது. ஜியா-உல்-ஹக் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிறகு, பலூசிஸ்தான் தலைவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்காலிகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.  இதன் மூலம், 1980கள் மற்றும் 1990களில் பலூசிஸ்தான் பொதுவாக அமைதியானதாக இருந்தது.

இருப்பினும், புதிய நூற்றாண்டின் விடியலுடன், பலூசிஸ்தானில் அமைதியின்மை பரவத் தொடங்கியது. வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக இந்தப் பகுதி மீண்டும் கலவரமடையத் தொடங்கியுள்ளது. கார்கில் போருக்குப் பிறகு, கராச்சியுடன் இணைந்து ஒரு துறைமுகத்தைக் கட்டுவது குறித்து பாகிஸ்தான் பரிசீலித்து வந்தது. இதனால், மீன் பிடித்தலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த கடலோர கிராமப்புறமான குவாதர் பகுதிக்கு கவனம் செலுத்தப்படுகிறது. சீனாவின் நிதி உதவியுடன் 2001 ஆம் ஆண்டு இங்கு துறைமுகக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இங்குள்ள தொழில்களில் பலூச் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இங்கு நடந்த நில விற்பனையில் பலூச்களுக்கு இடம் இல்லாமல் போனது.

துறைமுகக் கட்டுமானம் உள்ளூர் மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்ந்து, அமெரிக்கா தலைமையிலான ஆப்கன் போர் மீண்டும் பலூச் மக்களுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பஷ்டூன்கள் இந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். காலனித்துவ காலத்திலிருந்தே இந்த இரு குழுக்களிடையே இருந்த விரோதப் போக்கை இது மேலும் தூண்டியது. ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஓடிய தலிபான்களும் இந்தப் பகுதிகளில் தங்கள் தலைமையகங்களை நிறுவினர். இதனுடன், பலூசிஸ்தானியர்கள், பலூச் அல்லாதவர்களைத் தாக்கத் தொடங்கினர்.

பலூசிஸ்தானில் உள்ள புக்தி பழங்குடியினரின் தலைவரான நவாப் அக்பர் கான் புக்தி, 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்களால் கொல்லப்பட்டபோது நிலைமை வியத்தகு முறையில் மாறியது. அதன் மூலம், பலூசிஸ்தான் ஆதரவு ஆர்வலர்கள் தலைமையிலான வலுவான பதிலடிக்கு பலூசிஸ்தான் தயாரானது. 2022 ஆம் ஆண்டுவாக்கில், பலூச் விடுதலைப் படை மற்றும் பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகியவை தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தின. மாரி மற்றும் புக்தி பழங்குடியினரால் செல்வாக்கு பெற்ற இந்த இரண்டு குழுக்களும் திட்டமிட்ட வகையில் செயல்படுகின்றன. கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பலுசிஸ்தான் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பலூசிஸ்தானின் உள் அரசியல் நிலப்பரப்பைப் பிரிக்கும் பல காரணிகள் உள்ளன, அதாவது பழங்குடி, மொழி மற்றும் வர்க்கம். பலூசிஸ்தானின் முக்கியமான மொழிகளில் பிரஹுயி ஒன்றாகும். முன்னதாக, இந்த மொழியைப் பேசுபவர்கள் சுமார் 38 லட்சம் பேர் இருந்ததாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டின. ஆனால், இன்று மிகச் சிறிய குழு மட்டுமே இந்த மொழியைப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தானில் பிரஹுயி உட்பட 70க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொழியியல் ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பாகிஸ்தானில், பல மொழிகள் அழிவை எதிர்கொள்கின்றன. 2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மொழி பாகிஸ்தானில் அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 29 மொழிகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது.

மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளுடன் பிரஹுயி மிகுந்த ஒற்றுமை கொண்டிருப்பது பலூசிஸ்தானின் திராவிடத் தொடர்புகளுக்கு சான்றாக இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். திராவிட மொழியெனக் கருதப்படும் பிரஹுயி, இன்றும் தென்னிந்தியாவிலிருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஒரு பகுதியில் உயிர்ப்புடன் உள்ளது. பிரஹுயி மொழியின் இலக்கண அமைப்பும் சொற்கோவைகளும் தென்னிந்திய - திராவிட - மொழிகளுடன் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காட்டுகின்றன.

பிரஹுயின் வரலாறு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முகலாய ஆட்சிக் காலத்திலும் இது பற்றிய சில பதிவுகள் உள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கலாட் என்ற இடத்தில் பிரஹுயி பேசப்படுகிறது. அவர்கள் பிரஹுயியர்கள் அல்லது பிரஹுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். 17 ஆம் நூற்றாண்டில் பலூசிஸ்தான் பகுதியில் பிரஹுயி பேரரசு இருந்ததாகவும், இன்றைய கராச்சி உள்ளிட்ட பகுதிகள் இந்தப் பேரரசின் கீழ் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

இந்தோ-ஆரிய மொழிகளில் ஒரு திராவிட மொழி எவ்வாறு தோன்றியது என்பது குறித்து, சில வரலாற்றாசிரியர்கள் அவை திராவிட கலாசாரமாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அவர்கள் பலூச் பக்கம் சென்றிருக்கலாம். 12 ஆம் நூற்றாண்டில் பிரஹுயிகள் இந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று நம்புபவர்களும் உள்ளனர். தமிழ்நாட்டில் தொல்லியல் ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்காலத்தில் இதுதொடர்பாக மேலும் புதிய தகவல்களை வழங்கக்கூடும். தமிழ்நாட்டின் தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள் இரும்பு யுகம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகின்றன.

சில பிரஹுயி - மலையாளசொற்களைப் படிப்போம்:

பிரஹுயி மொழியில் உள்ள சொல் 'இன்னோ (அதாவது, தமிழில் ‘இன்றோ’ எனலாம்’ என்பது மலையாளத்தில் ’இன்றைய' என்ற சொல்லைப் போன்றது.

"நீ" என்ற வார்த்தை மலையாளத்தில் பயன்படுத்தப்படும் அதே அர்த்தத்தில் பிரஹுயிலும் பயன்படுத்தப்படுகிறது.

பிரஹுயில் "பா" என்று சொல்வது நம் மொழியில் "வா" என்று சொல்வதற்கு சமம்.

"கல்" என்பதற்கு "கல்" என்றும், "ஊரின்" என்பதற்கு "உரு" என்றும், "கலின்" என்பதற்கு "கல்" என்றும், "கண்" என்பதற்கு "கண்" என்றும், "அரி"க்கு "அரிசி" என்றும் கூறுகின்றனர். இது மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற திராவிட மொழிகளுடனான ஒற்றுமையை விளக்குகிறது. தற்போது, ​​பிரஹுயில் பயன்படுத்தப்படும் சொற்களில் சுமார் 15 சதவிகிதம் திராவிட சொற்கள். பலூச்சி மற்றும் உருது சொற்களும் சமீபத்தில் பிரஹுயி மொழியில் நுழைந்துள்ளதாகக் மொழியியலாளர்கள் மேற்கோள் காட்டும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற பலூசிஸ்தான் எடுக்கும் முயற்சிகளும், அது தொடர்பான மோதல்களும் இந்த மொழியின் உயிர் வாழ்வைப் பாதிக்கும் என்று மொழியியலாளர்கள் கவலை கொண்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அழிந்து வரும் மொழியாகப் பட்டியலிடப்பட்ட பிரஹுயி மொழியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அல்லாமல் பாகிஸ்தானில் மத்திய உயர் நிலை சேவைகளுக்கான தேர்வுகளின் மொழிகளில் ஒன்றாக பிரஹுயியைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகூட இன்னும் பரிசீலிக்கப்படவில்லை.

பலூச் மக்களின் பிரஹுயி மொழியும் திராவிட மொழிகளும் கொண்டிருக்கும் பிணைப்புகள் புதிய திறப்புகளை ஏற்படுத்துகின்றன.

மசூத் அஸாா் மைத்துனா் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சா்ச்சை

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸாா் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 போ் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் ர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!

இஸ்லாமாபாத்: போர் நிறுத்தம் எதிரொலியாக பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் சீராகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம... மேலும் பார்க்க

சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு

புது தில்லி: பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து திறந்துவிடப்பட்ட சிந்து நதி நீர் விவகாரத்தில், முன்னதாக அறிவித்தபடி இதே நிலைப்பாடே தொடரும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் ஒப்புதல்: துணைப் பிரதமர்

இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். எல்லையில் இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மே 7ஆம் தொடங்க... மேலும் பார்க்க

போரை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் சம்மதம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

போரை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகின... மேலும் பார்க்க