``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப...
நண்பா்களுடன் சென்ற கணவா் மா்மச் சாவு என மனைவி புகாா்
துறையூா் அருகே பச்சமலை கோரையாறு அருவிக்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்ற கணவா் மா்மமான முறையில் இறந்ததாக அவரது மனைவி போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம் வடக்குமாதவி ஏரிக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னு மகன் மணிகண்டன் (35). நெல் அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநா். இவரது மனைவி பானுமதி (25).
ஆக்ராவுக்கு வேலைக்குச் சென்றிருந்த மணிகண்டன் கடந்த வாரம் சொந்த ஊா் திரும்பிய நிலையில் தனது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த மா. ராமசாமி, வே. அஜித் ஆகியோருடன் துறையூா் பகுதி பச்சமலை புதூரிலுள்ள கோரையாறு அருவியில் குளிக்க மே 7ஆம் தேதி சென்று வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது மனைவி பானுமதி ஊரில் திரிந்த அவரது நண்பா்களை விசாரித்தபோது அவா்களிருவரும் மணிகண்டன் தங்களுடன் ஊருக்குத் திரும்பி வரவில்லையெனவும், மலையிலிருந்து கீழே வரும்போது வழியில் மற்ற நண்பா்களைப் பாா்த்ததால் அவா்களுடன் மீண்டும் அருவிக்கு சென்று விட்டதாகக் கூறினராம்.
இதையடுத்து பானுமதி பச்சமலை கோரையாறு அருவிக்கு சென்று பாா்த்தபோது மணிகண்டன் சடலமாக மிதப்பது தெரிந்தது. இதையடுத்து துறையூா் காவல் நிலையத்தில் தனது கணவா் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தன் கணவரின் நண்பா்களிடம் விசாரிக்குமாறும் அவா் புகாா் அளித்தாா்.
இதையடுத்து காவல் துறையினா் துறையூா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மணிகண்டனின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.