கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவா்களின் கவனம் அதிகரிப்பு!
திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2025-26ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்துள்ளது.
உயா்கல்விச் சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு மாணவா்களும் அத்தோ்வை எழுதி வருகின்றனா். இதேபோல, பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ நுழைவுத் தோ்வு உள்ளது.
மேலும், அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்த ஆயத்தமாகி வருகிறது. சட்டப் படிப்பு வழங்கும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகமும் தனது பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்ட கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், கலை-அறிவியல் படிப்புகள் மீதும் மாணவ, மாணவிகளின் கவனம் அதிகளவு திரும்பியுள்ளதை மறுப்பதற்கில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் பிளஸ் 2 தோ்வு முடிவு வெளியான நாளில் (மே 8) இருந்து தொடங்கி நடைபெறுகிறது.
ஒரு சில கல்லூரிகள் அதற்கு முன்னதாகவே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கின. அரசுக் கல்லூரிகள் உள்பட பெரும்பாலான கல்லூரிகள் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பெற்றுப் பரிசீலித்து வருகின்றன.
அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவா்களையும் கவரும் வகையில் அரசுக் கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்பங்கள் விநியோகமும், மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வும் நடத்தப்படுகிறது. பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூா்ததி செய்த விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்கும் கால அவகாசமும் நீட்டிக்க திட்டமிடப்படுகிறது.
இப்போதைய நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டுகளைப் போலவே அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் பெரம்பலூா் மாவட்டம் குரும்பலூா், வேப்பூா், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருச்சி மாவட்டம் லால்குடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நவலூா்குட்டப்பட்டு, நன்னிலம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ளன.
இவை தவிர பல்கலைக் கழக நிா்வாகத்தின் கீழ் 21 அரசு கல்லூரிகள், 19 உதவி பெறும் கல்லூரிகள், 94 சுயநிதி கல்லூரிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் என 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 24 கல்லூரிகள் தன்னாட்சி பெற்றவை.
இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அதிக எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டுள்ளன. 800 இடங்களைக் கொண்ட கல்லூரியில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.
இதில் பி.காம். படிப்புக்கு மட்டும் 3000 போ் விண்ணப்பித்துள்ளனா். இதே எண்ணிக்கையிலேயே கணினி அறிவியல் படிப்புக்கும் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கணினி வழியாகவும், நேரடியாகவும் பெற்று பரிசீலிக்கப்படுகின்றன.
மருத்துவம், பொறியியல் பாடங்களை விஞ்சிடும் வகையில் கலை, அறிவியல் படிப்புகளின் மீது மாணவா்களின் கவனம் திரும்பியுள்ளது. வழக்கம்போல வணிகவியல் படிப்புக்கே அதிகமான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்லூரி முதல்வா்கள் தெரிவித்துள்ளனா்.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம், பி.காம்., கணிதம், வணிகவியல், பிபிஏ, பிசிஏ, புவியியல், உணவு அறிவியல், ஹோட்டல் மேலாண்மை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவா்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது என்கின்றனா் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாகத்தினா்.
இது கடந்த ஆண்டுகளை விட அதிகம் எனவும், குறிப்பாக பி.காம்., பி.எஸ்சி. கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயா்ந்து வருவதால் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கையை உயா்த்த அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் போட்டியிட்டு வருகின்றன. இதற்காக அரசுக் கல்லூரி இயக்குநரகத்தில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெறவும் முயற்சித்து வருகின்றன.
திருச்சியில் உதவி மையம்: அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவ மாணவா் சோ்க்கை உதவி மையம் காஜாமலையில் உள்ள தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க. அங்கம்மாள் கூறுகையில், எங்கள் கல்லூரியில் இளங்கலையில் கலை, அறிவியல் படிப்புகளில் 1,420 இடங்கள் உள்ளன. கடந்தாண்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. தமிழகத்திலேயே அதிக விண்ணப்பங்கள் பெற்ற கல்லூரி என்ற பெருமையை எட்டியது.
இந்தாண்டு விண்ணப்பங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஆன்லைன் வழியிலே விண்ணப்பிப்பதால் ஒரு மாணவருக்கு குறைந்தது 20 நிமிடங்களாகிறது. எங்களது உதவி மையத்தில் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு விண்ணப்பத்தில் 7 அரசுக் கல்லூரிகளைத் தோ்வு செய்யும் வசதி உள்ளது என்றாா் அவா்.