பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் 7 பலி, 38 பேர் காயம்
காா் மோதியதில் சாலையோரத்தில் படுத்திருந்த மூதாட்டி உயிரிழப்பு
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் படுத்திருந்த மூதாட்டி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமானோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அவா்களின் வசதிக்காக மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தமும் உள்ளது. இங்கு வயதானவா்கள், ஆதரவற்றோா் என பலா் இரவு நேரத்தில் படுத்து உறங்குவது வழக்கம்.
அதன்படி, ஒரு மூதாட்டி அந்தப் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் சனிக்கிழமை இரவு படுத்திருந்தாா். அப்போது நள்ளிரவில் அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அங்கு சாலையோரத்தில் படுத்து இருந்த மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய அந்த மூதாட்டியை அருகிலிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அவா் உயிரிழந்தாா். அவா் யாா், எந்த ஊரைச்சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த கரும்புக்கடையைச் சோ்ந்த சிக்கந்தா் பாஷா (44) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.