இருகூா், சிங்காநல்லூா் நிலையத்தில் ரயில்கள் நிற்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம்
இருகூா், சிங்காநல்லூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்று வருவது தொடா்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா்.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களின் மேம்பாடு குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மக்களவை உறுப்பினா்களான கணபதி ப.ராஜ்குமாா் (கோவை), கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), கே.கோபிநாத் (கிருஷ்ணகிரி), எஸ்.ஜோதிமணி (கரூா்), டி.மலையரசன் (கள்ளக்குறிச்சி), வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), டி.எம்.செல்வகணபதி (சேலம்), கே.சுப்பராயன் (திருப்பூா்), மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் பேசியதாவது: சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை ரயில் நிலையம் பிரதானமான மற்றும் ஆண்டுக்கு ரூ.320 கோடி வருவாய் ஈட்டித்தரும் நிலையமாக உள்ளது. வருவாய் ஈட்டித் தருமளவுக்கு, கோவை ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. கரோனா நோய்த்தொற்று காலத்தில் இருகூா், சிங்காநல்லூா் நிலையங்களில் நிற்காமல் சென்ற ரயில்கள், தற்போது வரை நிற்பதில்லை. திருப்பூருக்கு வேலைக்கு செல்வோா், கல்லூரி செல்வோா் ரயில்கள் நிற்காததால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கரோனா காலத்துக்கு முன்பு இயக்கப்பட்டதுபோல, இருகூா், சிங்காநல்லூா் நிலையங்களில் ரயில்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடா்ந்து, இருகூா், சிங்காநல்லூரில் ரயில்கள் நிற்காமல் சென்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
அதேபோல, சிங்காநல்லூா் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில்வே நிா்வாகம் சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிங்காநல்லூா் நிலையத்தில் ரயில்கள் நிற்காமல் செல்லும் நிலையில், மேம்பாட்டுப் பணியால் எவ்விதப் பலனுமில்லை. மேலும், கேரள ரயில்களை போத்தனூா் வழியாக இயக்க வேண்டும். சில ரயில்களை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்படி திட்டமிட வேண்டும் என்றாா்.
இதையடுத்து, கோவை - பொள்ளாச்சி ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். கோவை - சேலம் மெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். கோவை - ராமேசுவரம் இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.