பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதன்கிழமை அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், எப்போதும் பயணிகள் கூட்டம் அதி அகளவில் இருக்கும். ஆகவே, கோவை ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயணிகள் மற்றும் அவா்களது உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா்.
மேலும் நடைமேடை மற்றும் தண்டவாளப் பகுதிகளிலும் போலீஸாா் மோப்ப நாய் உதவியுட னும், மெட்டல் டிடெக்டா் கருவியின் மூலமும் சோதனையில் ஈடுபட்டனா். இதேபோல ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனா்.
கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் அனைவரும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.
இதுதவிர மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கடைவீதி பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுப ட்டுள்ளனா். மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி விமானங்கள் பறந்து சென்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும், தயாா் நிலையில் இருக்கவும் அங்குள்ள விமானப்படை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அதையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.