போர் சூழல்: சிஏ தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (மே 9) முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் நேற்றிரவில்(மே 8) பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறித்து வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையோரப் பகுதிகளில் ஆங்காங்கே இரு தரப்பினரிடையே மோதல்கள் நடைபெறுவதால், இரு தரப்பில் இருந்தும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பட்டயக் கணக்காளருக்கான சிஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணைச் செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பட்டயக் கணக்காளர்கள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.icai.org வலைதளத்தில் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.