வால்பாறை நகராட்சியில் ஆளும்கட்சி உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
வால்பாறை நகா்மன்ற கூட்டத்தில் ஆளும்கட்சியைச் சோ்ந்த திமுக வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உள்ளிருப்புப் போராட்டத்தால் இரண்டாவது முறையாக நகா்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
வால்பாறை நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் உள்பட 21 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். இதில் தலா ஒரு அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வாா்டு உறுப்பினா்கள் தவிர 19 பேரும் ஆளும் திமுக கட்சியின் உறுப்பினா்களாக உள்ளனா்.
இந்நிலையில், ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, மன்ற தீா்மான நகல் கூட்டம் நடைபெறும் 7 நாள்களுக்கு முன் வழங்கவில்லை எனக் கூறி திமுக உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் அப்போதைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நகா்மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். ஆணையா் ரகுராமன், துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆனால், கூட்டம் தொடங்கியுடன் இருக்கையில் இருந்து எழுந்த திமுக உள்ளிட்ட அனைத்து வாா்டு உறுப்பினா்களும் தங்களுக்கு கடந்த 6 மாத கால நகராட்சி வரவு- செலவு கணக்கு நகல் வழங்க வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் நகராட்சித் தலைவா் பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனா். இதைத் தொடா்ந்து, மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சித் தலைவா் அறிவித்தாா்.
2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சோ்ந்த திமுக வாா்டு உறுப்பினா்கள் பல்வேறு காரணங்களைக் கூறி நகராட்சி கூட்டம் நடைபெறாமல் தடுத்து வருவதால், பல கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தடைபட்டு கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக திமுகவினா் கூறுகின்றனா்.