54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!
Doctor Vikatan: 30 வயதில் திடீரென ஏற்பட்ட ஞாபக மறதி; சாதாரண பாதிப்பா, பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: என் நண்பனுக்கு 31 வயதுதான் ஆகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அவன் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தது. எந்த விஷயத்தைக் கேட்டாலும் நினைவில்லை என்றான். அவனுக்கு குடிப்பழக்கம் இல்லை. இரண்டு நாள்கள் கழித்து நார்மலாகிவிட்டான் என்றாலும் அந்தச் சம்பவம் எனக்கு உறுத்தலாக இருக்கிறது. இந்த இளம்வயதில் இப்படி திடீரென ஞாபக மறதி வருமா... அதற்கு என்ன காரணமாக இருக்கும்... இதற்கு சிகிச்சை அவசியமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

உங்கள் நண்பருக்கு ஏற்பட்ட திடீர் ஞாபக மறதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். மறதியின் தீவிரம் எப்படியிருந்தது என்பதை வைத்துதான் அது குறித்து விளக்கமளிக்க முடியும். பொதுவாக நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் இப்படி திடீரென மறதி ஏற்படுவதும், பிறகு சரியாவதும் நடந்திருக்கும்.
உங்கள் நண்பர் ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாரா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, டிப்ரெஷன், பதற்றம், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், வலிப்பு, சிலவகை வலிகள் போன்ற பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் தற்காலிக மறதியை ஏற்படுத்தலாம். மேற்குறிப்பிட்ட ஏதேனும் பிரச்னைக்காக அவர் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், உங்கள் நண்பருக்கு மறதி இருப்பதாக உணர்ந்தால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
தீவிரமான மன அழுத்தம் இருந்தாலும் அதன் விளைவாக மறதி பாதிப்பு ஏற்படலாம். சமீபத்தில் உங்கள் நண்பருக்கு அப்படி ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். மன அழுத்தம் சரியானால் மறதியும் சரியாகும்.
நினைவாற்றலுக்கு மிக முக்கியமானது வைட்டமின் பி12. அது போதுமான அளவு இல்லாதபோதும் மறதி வரலாம். மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள், பால், சீஸ் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும். மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் பி 12 சப்ளிமென்ட்ஸும் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் நண்பருக்கு சமீபத்தில் எங்கேயாவது கீழே விழுந்து அடிபட்டதா என்று யோசியுங்கள். அப்படி ஏதேனும் நடந்திருந்தாலும், தற்காலிகமாக மறதி ஏற்படலாம். இது சில மணி நேரம் முதல் சில நாள்கள்வரைகூட நீடிக்கலாம். அவருக்கு ஹைப்போதைராய்டிசம் பாதிப்பு இருந்தாலும் அதன் விளைவுகளில் ஒன்றாக மறதி ஏற்படலாம். எனவே, தைராய்டு அளவுகளை சரிபார்க்கச் சொல்லுங்கள். மருந்துகளில் மாற்றம் தேவையா என்று மருத்துவரைக் கலந்தாலோசிக்கச் சொல்லுங்கள்.
தற்காலிக மறதிக்கு பெரிய சிகிச்சைகள் தேவையில்லை. மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது, நல்ல ஓய்வு, தூக்கம், சத்தான சாப்பாடு, வைட்டமின் பி 12 சப்ளிமென்ட் போன்றவற்றின் மூலம் இதிலிருந்து விடுபடலாம். நினைவிழப்பின் தீவிரம் உங்கள் நண்பருக்குத்தான் தெரியும் என்பதால், ஏதேனும் அசாதாரணமாக உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.