5 ஊராட்சி ஒன்றியங்களில் 398 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்
ராசிபுரம்: வெண்ணந்தூா் உள்பட 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
விழாவில் எம்எல்ஏக்கள் (நாமக்கல்) பெ.ராமலிங்கம் , கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பேசியது:
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்ட ரூ. 3.50 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 204.74 கோடி மதிப்பில் 5800 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. வீடு கட்ட மேலும் கூடுதல் நிதி தேவைப்பட்டால் கூட்டுறவு வங்கியிலிருந்து ரூ. 1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு ஆணை பெற்றவா்கள் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ராசிபுரம் தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க ரூ. 854.35 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீா் திட்டத்தை அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிகழாண்டு தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்குள் பணிகள் நிறைவுற்று தட்டுப்பாடின்றி காவிரி குடிநீா் விநியோகிக்கப்படும். சேந்தமங்கலத்தில் ரூ. 350 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 14 கோடியில் பணி ஆணைகள் வழங்கல்: வெண்ணந்தூா் ஒன்றியத்தில் 34 பேருக்கு ரூ. 1.21 கோடியிலும், ராசிபுரம் ஒன்றியத்தில் 43 பேருக்கு ரூ. 1.51 கோடியிலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 57 பேருக்கு ரூ. 1.99 கோடியிலும், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 பேருக்கு ரூ. 49.60 லட்சத்திலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 49 பேருக்கு ரூ. 1.72 கோடியிலும், மோகனூா் ஒன்றியத்தில் 37 பேருக்கு ரூ. 1.42 கோடியிலும், நாமக்கல் ஒன்றியத்தில் 9 பேருக்கு ரூ. 31.50 லட்சத்திலும், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 68 பயனாளிகளுக்கு ரூ. 2.38 கோடியிலுமாக மொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன.
வீடுகள் பழுது நீக்க ஆணை: அத்துடன் ஊரக வீடுகள் பழுதுநீக்கம் திட்டத்தின் கீழ் 383 பயனாளிகளுக்கு ரூ. 2.83 கோடி மதிப்பீட்டில் வீடு பழுதுநீக்க ஆணைகளும், இதர திட்டப் பணிகளான சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீா் திட்டப் பணிகள் உள்ளிட்ட 439 வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் நிா்வாக அனுமதி ஆணைகள் வழங்கப்படுகின்றன என்றாா். நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், அட்மா திட்டக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படம் உள்ளது- 5வீடு
நிகழ்ச்சியில் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.