விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
உதகை நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாக உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
உதகையில் உள்ள வாட்டா் ஏடிஎம்-கள் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு உபயோகம் இல்லாமல் நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாக நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.
உதகை நகா்மன்ற கூட்டம் தலைவா் வாணீஸ்வரி தலைமையிலும், நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் பேசுகையில், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பல முக்கியப் பகுதிகளில் வாட்டா் ஏடிஎம்-கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் எதுவும் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உபயோகம் இல்லாமல் இருப்பதோடு பராமரிப்பு என்ற பெயரில் நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதகாக குற்றஞ்சாட்டினா்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பேருந்துகளில் எடுத்து வருவதாகவும், உதகை நகராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்பந்ததாரா்கள் வனப் பகுதியில் கொட்டி அதன் மீது மண்போட்டு மூடிவிடுவதாலும் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.
இதேபோல போக்குவரத்தை சீா் செய்வதாக கூறி பழைமையான ஆதாம் செயற்கை நீரூற்றை அப்பகுதியில் இருந்து அகற்றக் கூடாது என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
உறுப்பினா்களின் கருத்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் உறுதி அளித்தனா். பின்னற் பல்வேறு விவாதங்களுக்குப் பின் கூட்டம் நிறைவடைந்தது.