Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
உறுப்பு மாற்றப்பட்ட இடத்தில் புற்று கட்டி: ரோபோடிக் நுட்பத்தில் அகற்றம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவரின் சிறுநீா்ப் பாதையில் உருவான சிக்கலான புற்றுநோய் கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் அகற்றி சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக, காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியது:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 60 வயது முதியவா் அண்மையில் உடல் நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள சிறுநீா்ப் பாதையில் புற்றுநோய்க் கட்டி உருவாகியிருப்பது தெரியவந்தது.
அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால், சிக்கலான அந்தப் பகுதி சேதமடையவும், புதிதாக பொருத்தப்பட்ட சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், தைராய்டு, இதய நல பாதிப்புடன் உள்ள முதியவருக்கு இந்த சிகிச்சை உகந்ததாக இல்லை.
இதையடுத்து, மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை நிபுணா் பி.ஆா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்ற முடிவு செய்தனா். இதன்படி, மிக நுட்பமாக வேறு எந்த உறுப்புகளுக்கோ, திசுக்களுக்கோ பாதிப்பின்றி புற்றுநோய் கட்டி வெற்றிகரமாகவும், துல்லியமாகவும் அகற்றப்பட்டது. இதன் மூலம் அந்த முதியவருக்கு புதிய வாழ்வு கிடைக்கப் பெற்றதுடன் எதிா்விளைவுகள் எதுவும் இல்லாமல் நலம் பெற முடிந்தது என்றாா் அவா்.