உலகின் மிக வயதான நபர்... கின்னஸ் சாதனையாளர் ஜான் டின்னிஸ்வூட் மறைந்தார்!
பிரிட்டனைச் சேர்ந்த உலகிலேயே மிகவும் வயதான நபரான ஜான் அல்ஃபிரட் டின்னிஸ்வூட் என்பவர், தனது 112-வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் உலகிலேயே வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைத்தார் ஜான் டின்னிஸ்வூட். இவர் ஆகஸ்ட் 26 1912 ஆம் ஆண்டு லிவர்பூலில் பிறந்தவர்.
ஆரம்பத்தில் இவர் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் ராணுவத்தில் நிதி சார்ந்த வேலைகளைச் செய்துள்ளார். பின்னர் ராயல் மெயில் எனும் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். பணி ஓய்வு பெற்ற பின்னும் பிரிட்டனில் உள்ள தேவாலயம் ஒன்றில் பணியாற்றியுள்ளார் டின்னிஸ்வூட். முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ``நான் எப்போதும் இளைஞனைப்போல ஆக்டிவாக இருப்பேன். நிறைய நடப்பேன்" என்று கூறியுள்ளார். கால்பந்து போட்டியின் தீவிர ரசிகரான இவர், லிவர்பூல் கால்பந்து குழுவின் தீவிர ரசிகராவார்.
ஜான் டின்னிஸ்வூட் தனது 100-வது பிறந்தநாளுக்கு முன்பு ஹோல்லிஸ் எனும் முதியோர் இல்லத்துக்கு குடிபெயர்ந்தார். தன் மரணம் வரை அவர் அங்குதான் வாழ்ந்தார். அங்கு சென்ற பின் தான் சற்று உற்சாகமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 2012ல் எலிசபெத் ராணி, ஜான் டின்னிஸ்வூட்டின் 100-வது பிறந்தநாளின்போது வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி நாட்கள் இசையாலும் அன்பாலும் நிறைந்திருந்ததாக அவரது உறவினர் கூறியுள்ளார்.
ஜான் டின்னிஸ்வூட்டிடம், நீங்கள் நீண்ட நாள்கள் வாழ்வதற்கு என்ன காரணம் என கேட்டதற்கு, ``இது வெறும் அதிர்ஷ்டம் தான். நிறைய நாள்கள் வாழ்வதற்கும் குறைந்த நாள்கள் வாழ்வதற்கும் நாம் எதுவும் பண்ண முடியாது" என்றார்.
`உலகத்தில் நீங்கள் கண்ட மாற்றம் என்ன?' என்று நிருபர் ஒருவர் ஜான் டின்னிஸ்வூட்டிடம் கேட்டதற்கு, ``ஏரோபிளேன் போன்ற நவீன தொழில்நுட்பத்தால் உலகம் சின்னதாக ஆகிவிட்டது. ஆனால் என்னை பொறுத்தவரை எந்த கண்டுபிடிப்பாலும் உலகம் முழுவதும் மாறிவிடவில்லை. உலகம் அதே போல தான் உள்ளது" என பதிலளித்தார்.
அறிவுரைகள் ஏதும் பெரிதும் வழங்காத ஜான் டின்னிஸ்வூட் இளைஞர்களுக்கு அடிக்கடி சொன்னது இதுதான், "நீங்கள் எதைச் செய்தாலும்... அதனை சிறப்பாகச் செய்துவிடுங்கள். நீங்கள் கற்றுக்கொள்பவராக இருந்தாலும் சரி, கற்றுக்கொடுப்பவராக இருந்தாலும் சரி."