ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல்...
உழைப்பாளா் தினம், வாரவிடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள்
சென்னை: உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வாரவிடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உழைப்பாளா் தினம் (மே 1), முகூா்த்த நாள் (மே 2), வார விடுமுறை (மே 3, 4) ஆகிய விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு புதன்கிழமை 565 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 100 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 90 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், மாதவரத்திலிருந்து புதன்கிழமை (ஏப்.30) முதல் சனிக்கிழமை (மே 3)வரை 24 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை (மே 4) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 715 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.