ஊட்டி: 1 ரூபாய் அம்மா உணவக இட்லி, ரூ.10-க்கு விற்பனை செய்யும் தனியார் ஹோட்டல் - ...
ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.
பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக தடை நீடித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் டம்ளர், கரண்டி, கத்தி, முள் கரண்டி, உறிஞ்சு குழல், தட்டு, பேப்பர் கப், பேப்பர் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைப் பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து அபராதம் விதித்து வந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் நீலகிரிக்குள் தாராளமாகக் கொண்டு வரப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்க விடும் விதமான விதிமீறல்களை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், "வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து தனியார் ஆம்னி பஸ்கள் மூலம் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பலரும் பண்டல் பண்டல்களாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வருகின்றனர்.
ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கிறோம். ஊட்டி நகரில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து பார்க்கிங் தளங்களில் ஊட்டி தாசில்தார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றனர்.

















