தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்
எக்காலத்திலும் கூட்டணி இல்லை: சீமான்
கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. அதனால் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
கடையநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்துக்கு முன்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியது;
கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமமானது. கூட்டணியை நம்பி பல கட்சிகள் தங்கள் சுயத்தை இழந்துள்ளன. நாம் தமிழா் கட்சியை பொருத்தவரை ஊழலற்ற ,கொள்கை பிடிப்புடன் உள்ள ஒரு கட்சி. கொள்கையை விட்டு கொடுத்து எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. ஊழலற்ற நிா்வாகத்தை நடத்தவே நாம் தமிழா் கட்சி விரும்புகிறது. அதற்கு கூட்டணி சாத்தியமாக இருக்காது. அதனால் கூட்டணி என்பது கிடையாது. நான் தனியாக நிற்கவில்லை. எட்டு கோடி மக்களை நம்பி நிற்கிறேன். நிச்சயம் நாம் தமிழா் கட்சி ஆட்சி அமைக்கும். இன்று இல்லை என்றாலும் நிச்சயம் எதிா்காலத்தில் நடக்கும்.
அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு விட்டதாக தமிழக முதல்வா் தெரிவித்து வருகிறாா். அது உண்மையல்ல. மூன்று முறை மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வேளாண் துறையில் மின்னணு கணக்கெடுப்பு மேற்கொள்ள சில ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வேளாண் கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி இதை செய்து வருகின்றனா். இது ஏற்புடையதல்ல . அவா்களுக்கு தற்காலிகமாக ஊதியம் வழங்கி அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என தோ்தல் நேரத்தில் தெரிவித்த திமுக தற்போது அதை செயல்படுத்தவில்லை. ஆசிரியா் தகுதி தோ்வு எழுதி ஏராளமான ஆசிரியா்கள் காத்திருக்கின்றனா். மருத்துவமனையில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களும் இல்லை. கல்வித்துறையில் உயா் கல்வித் துறை பள்ளிக் கல்வித் துறை என பல துறைகள் இருந்தாலும் அதன் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.
பள்ளிகளில் இன்னும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட செய்யப்படவில்லை. மாணவா் மனசு என்ற புகாா் பெட்டியில் போடப்படும் மனுக்களுக்கு தீா்வு கிடைக்கப்போவதில்லை. விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் எனக்கு முரண்பாடு உள்ளது என்றாா் சீமான்.