மின் வாரிய அலுவலக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: பொறியாளா் கைது
`எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ்; இதுவே சாட்சி’ - சாடும் அதிமுக மருத்துவரணி
"தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு ஒருவர் எக்ஸ்ரே எடுத்ததற்கு, எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரத் துறை உள்ளது" என்று அ.தி.மு.க மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 38 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 256 தாலுகா மற்றும் தாலுகா சாரா மருத்துவமனைகள், 1832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் சுகாதாரத் துறையில் பல்வேறு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டது. மதுரையில் ரூ.150 கோடி மதிப்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அதன் மூலம் கூடுதலாக 1,700 மருத்துவக் கல்வி இடங்கள், 313 கோடியில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டன.
இதற்கெல்லாம் மேலாக மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 31,250 பல்வேறு மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆனால், இன்றைக்கு அரசு மருத்துவமனைகளில் 6,900 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, குறிப்பாக செவிலியர்கள், உதவியாளர்கள் என ஏறத்தாழ 32,000 மருத்துவ காலி பணியிடங்கள் உள்ளது. மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறை உள்ளதால் தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு அதிகரித்து வருகிறது.
அதேபோல் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தில் 2023 ஆண்டுகான இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை, அதேபோல் 2024 ஆண்டுக்கான இயக்குநர், பேராசிரியர் , இணைப் பேராசிரியர் பதவி உயர்வு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. பேராசிரியர்கள், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் என 2,500 பதவிகள் காலியாக உள்ளன.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் சுகாதாரத்துறையின் அவல நிலை குறித்து தோலுறுத்தி காட்டி வருகிறார், ஆனால் அதை கண்டுகொள்ளாமல் கும்பகர்ண தூக்கத்தில் சுகாதாரத்துறை உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார், உடனே அதுபோன்று இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்.
கத்திரிக்காய் முற்றினால் வீதிக்கு வந்திருக்கும் என்பதைப்போல இன்றைக்கு தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு ஒருவர் எக்ஸ்ரே எடுத்ததற்கு அதற்கு எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர்.
இன்றைக்கு மக்களுக்கு உண்மையாக உழைக்காமல் இந்த அரசு ஒரு ஜெராக்ஸ் அரசாக உள்ளதற்கு இதுவே சாட்சி, இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட சுகாதாரதுறை, தற்போது ஆமை வேகத்தில் உள்ளது. இதற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb