என் வாழ்வில் நடந்த `டூரிஸ்ட் ஃபேமிலி’ தருணம் - தி.நகர் வியாபாரியின் நெகிழ்ச்சி கதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
Feel Good :)
நான் தியாகராய நகர் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகிறேன். வியாபாரத்தை முடித்து விட்டு ரயிலில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது என் அருகில் பயணித்த இருவர் புதிதாக வெளிவந்த Tourist Family படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் படத்தை பார்த்து விட்டு கதை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கதை பற்றி பேசுகையில், ஒரு சிலோன் குடும்பம் அகதிகளாக சென்னை வருகிறார்கள். அவ்வளவு தான்..! என்று முடித்து விட்டார். நல்ல உணர்வுப்பூர்வமான திரைக்கதை எனவும், படத்தில் வரும் சிறுவனின் நகைச்சுவையான நடிப்பையும் பாராட்டினார்.
அவருடைய முழு கதையாடலை கேட்பதற்குள் இறங்கும் இடம் வந்து விட்டது. அவர் சொன்னது படத்துக்கான முன்னோட்டம் போல இருந்தது. படத்தை பார்க்க வேண்டுமென்று தூண்டியது. அந்த ஆவலுடன் படத்தை பார்த்தேன். அந்த படத்தை பார்த்த போது, மற்றொரு tourist family என் ஞாபகத்துக்கு வந்தது.

மிகப்பெரிய சில்லறை வர்த்தக மையமான தி.நகரில் மொத்த வியாபாரமாக பொருட்களை வாங்கக் கூடியவர்களாக வலம் வருபவர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ஆவர்.
அதில் தமிழை தாய்மொழியாக கொண்ட மலேசியா, இலங்கை, மாலத்தீவு, பர்மா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அதிகம்.
சினிமாக்களில் வருவது போல, கடல் கடந்து சென்றாலும் எங்காவது நம் மொழி பேசும் மக்களை சந்திப்பது ஆச்சர்யமும் நம்பிக்கையும் அளிக்கிறது. ஆனால், உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகையில் அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது.
இந்தக் கதையிலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்ததனால் வழக்கமாக காட்டப்படும் அகதிகள் உயிர் பிழைக்கும் கதையாக அல்லாமல், அவர்கள் வாழ்வதைக் காட்டும் கதையாக உள்ளது. நாடுகளாக பிரிந்த போதிலும், மொழியால் ஒன்றிணைகிறோம்.
Tourist Family:-
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் விழாக் காலங்களில் அதிகமாக இந்தியாவிற்கு வந்து செல்கின்றனர்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கான பொருட்களை வாங்குவதற்கு தமிழ்நாடு வருவது வழக்கம். திருப்பூர் பருத்தி ஆடைகள் மற்றும் ஜெய்ப்பூர் கம்மல் போன்ற பாரம்பரிய பொருட்களை விரும்பி வாங்குவார்கள். அவர்களிடம் பேசும் போது, அண்ணே..! அக்கா..! என்று உரையாடி, உறவாடி வியாபாரம் செய்வோம். அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டு பொங்கல் வாழ்த்துக்களுடன் விடைபெறுவார்கள்.
சிலர் நினைவுப் பரிசாக தங்கள் நாட்டு பணத்தை கொடுத்து விட்டுச் செல்வதுண்டு. அந்த வெளிநாட்டு நாணயத்தை பணத் தேவை ஏற்படும் போது மட்டும் மாற்றி பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லி விட்டுச் செல்வர்.

அந்த பணத்தை பார்க்கும் போது கொடுத்தவர்களுடன் சேர்த்து இரண்டு விடயங்கள் ஞாபகத்துக்கு வரும். முதலாவதாக 'பயன்படுத்து' என்ற சொல்லிற்கு மாற்றாக 'பாவித்து' என்று சொல்வார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடன் ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் படித்த 'மூதுரை' பாடல் ஒன்று நினைவில் தோன்றும். அது
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி !
- ஔவையார்.
Knowledge is Power :-
இதன் பொருளை சுருக்கமாக, கல்லாதவன் கற்றவனைப் போல் நடித்தாலும் கற்றவன் ஆக மாட்டான் எனலாம். இந்தப் பாடலை சற்று விரிவாகப் பார்த்தால் பல்வேறு விதமாக விளங்கிக் கொள்ள முடியும்.
மொழி என்பது ஒருவரின் நாவின் வழியாக மற்றவரின் செவிகளில் பதிந்து மூளையால் அறியப்படுகிறது.
இரண்டாவது மொழியைக் கற்றிருப்பது இரண்டாவது ஆன்மாவைப் பெறுவது போன்றது என மொழியியலாளர்கள் கூறுகின்றனர். எனவே, பொருள் உணராமல் மற்றவர் பேசுவதை பார்த்து பாவிப்பது அறிவற்ற செயலென்று நம்முடைய பாட்டி நமக்கு உரைத்திருக்கிறார். செல்லும் திசை எதுவென்று தெரியாமல் எங்கு சென்றாலும் கடினம் தான்.

இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. அனைத்து மொழிகளும் தனித்தன்மை வாய்ந்தவை. தமிழ் மொழிக் குடும்பத்தை பொருத்தவரை சிறிய அளவிலான வார்த்தை வித்தியாசங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. படத்தில் வரும் 'கதைக்க' போன்ற வார்த்தைகளை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆதலால், நாமும் தமிழைப் போல ஒரே குடும்பமாக மிக எளிதில் வாழ முடிகிறது.
மொழி, இனம், நிலம் என மக்களை வேறுபடுத்திப் பார்ப்பவர்களால் மற்றவர்களிடம் பழகும் தன்மை குறைவாக உள்ளது. தனி மனிதராகவும் குடும்பமாகவும் நாடாகவும் தங்களின் எல்லைக்குள் வாழ்கின்றனர். தங்களைச் சாராதவர்களை தங்களின் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. அவர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போது மனிதர்களின் பக்கம் திரும்புகின்றனர் அல்லது சமூகத்தால் திருத்தப்படுகின்றனர்.
மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் என்பது அவரவர் கற்ற கல்வியை மட்டுமே அளவீடாக கொள்ள வேண்டும். அதிகம் படித்தவர் காரை வடிவமைத்து அதில் பயணிக்கிறார். குறைவாக படித்தவர் காரை இயக்குகிறார். அவரவர் செய்யும் தொழிலில் மட்டுமே வேறுபடுகின்றனர். மனிதர்களாக நாம் அனைவரும் சமமே. அதில் சிறந்தவர்களை தேர்வு செய்ய அவர்களின் நல்ல பண்புகளை மட்டுமே அளவீடாகக் கொள்ள வேண்டும்.
Socialize:-
ஒரு பயணத்தில் நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம் என்பது முக்கியமில்லை. யாருடன் பயணிக்கிறோம் என்பதே முக்கியம். அதிகம் பயணம் மேற்கொள்பவர்கள் அனைவரும் இயல்பாக பழகும் குணம் கொண்டவர்களாக உள்ளனர்.
தன்னுடன் சாலைகளில் பயணிக்கும் அனைவரின் மீதும் அக்கறை உள்ளவர்கள். உங்கள் மீது அன்பு காட்ட யாரும் இல்லை என்ற சந்தேகம் எழுந்தால், சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஸ்டான்ட் எடுக்காமல் சென்று பாருங்கள். நீங்கள் விழுந்து விடக்கூடாது என்று மற்றவர்கள் உங்கள் மீது அக்கறை கொள்வதை காண்பீர்கள்.

மனிதன் பெற்ற அறிவானது இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டதால் தான் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆதி மனிதனின் நண்பனாகிய ஐந்தறிவு கொண்ட நாய் கூட மக்களிடம் எளிதில் பழக கற்றுக் கொண்டுள்ளது.
படத்தில் கூட ஒரு வெளிநாட்டு ரக நாய் வெவ்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களுடன் வாழ்வதை காட்டியிருப்பார்கள். தன்னை அன்பாக வளர்த்தவர் தன்னிடம் இல்லாத போதும், நாம் அன்பு செலுத்தியவர் நம்மை மறந்த போதும் இவ்வுலகம் நின்றுவிடப் போவதில்லை என்பது அந்த ஐந்தறிவிற்கும் தெரிந்திருக்கிறது. செல்லும் இடமெல்லாம் அன்பு கொண்டு பழகுவதால் அதன் எல்லை நீண்டு கொண்டே போகிறது.
No Borders :-
இரண்டாவதாக நினைவில் வருவது, அவர்களின் நினைவாக கொடுத்துச் சென்ற பணத்தை தேவை ஏற்படும் நேரத்தில் மட்டுமே 'பாவிக்கும்'படி 'கதைத்தது' .
அந்த பணத்தை பார்க்கும் போது, பிழைப்பிற்காக ஊரைவிட்டு செல்பவர்களுக்கு அம்மாக்களால் மஞ்சள் துணியில் கட்டி கொடுக்கப்படும் காசு நினைவுக்கு வருகிறது.
ஊருக்கு திரும்புவதற்கு கூட பணம் இல்லாத நேரத்தில் இந்த மஞ்சள் துணியில் முடிந்து வைக்கப்பட்ட பணம் பயன்படும். வாழ்வாதாரம் பாதிப்படைந்த நிலையில் அந்தப் பணத்தை பயன்படுத்தி ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தி அனுப்புவார்கள். இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே உள்ளது. இந்த வழக்கத்தின் காரணமாகவே பலர் அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வருகின்றனர்.

தமிழில் பல தூது இலக்கியங்களில் வாயிலாக தலைவன் தொழில் ரீதியாக தலைவியைப் பிரிந்து செல்லும் செய்திகளை அறியலாம். தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரங்களை இவ்விலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றை அறிகையில், பிரிந்த காதலர்கள் ஒரே வாரத்தில் மற்றவரை திருமணம் செய்யும் இக்காலத்திலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை பார்க்கையில் மரியாதை வருகிறது.
தூது இலக்கியங்களில் தூதுப் பறவையின் வாயிலாக செய்தி செல்வது போல் கடல் கடந்து வந்தவர்களின் வாழ்க்கையை ஒரு காவலரின் பார்வையில் கதையாக வரைந்திருக்கிறார்கள்.
இவற்றை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையுடன் 'கதைத்ததால்' படத்தில் வில்லனுக்கு பெரிதாக வேலையில்லை. காவல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மட்டுமே எல்லை தாண்டி வருபவர்களை அகதியாக பார்க்கப்படுகிறார்கள். மற்றபடி, யார் சொன்னது நீங்கள் அகதிகள் என்று..!
- சுபி தாஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!