எலக்ட்ரிக் ஸ்கூட்டா் பேட்டரி வெடித்து தீ விபத்து
தரங்கம்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் படகு உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன.
தரங்கம்பாடி சிங்காரவேலா் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் காந்தி (39). இவா், மீன்பிடி படகு எஞ்சின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை மற்றும் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறாா்.
இவரது மனைவி ஜானகி, எலக்ட்ரிக் ஸ்கூட்டா் பேட்டரிக்கு வீட்டில் சாா்ஜ் போட்டுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக பேட்டரி வெடித்து, தீ பற்றியது. இதில் வீட்டில் இருந்த படகு எஞ்சின் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. தரங்கம்பாடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து பொறையாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.