Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
எழுத்துப்பிழையால் சிக்கிய கடத்தல் நாடகம்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நபர் எழுத்துப்பிழையோடு எழுதிய மிரட்டல் கடித்ததால் சிக்கிக் கொண்டார்.
அம்மாவட்டத்தின் பந்தராஹா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் எனும் நபருக்கு கடந்த ஜன.5 அன்று ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், அவரது தம்பியான சந்தீப் (வயது 27) என்பவரை தாங்கள் கடத்தியுள்ளதாகவும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் ரூ.50,000 பணம் தர வேண்டும் இல்லையென்றால் சந்தீப்பை கொன்று விடுவோம் என்று மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், சந்தீப் கையிற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போன்ற 13-நொடி விடியோ ஒன்று அவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. பின்னர், சஞ்சய் அம்மாநில காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்த மிரட்டல் கடிதத்தில், அவரைக் கொன்று விடுவோம் என குறிப்பிடும் ஆங்கில வார்த்தை பிழையோடு எழுதப்பட்டிருப்பதைக் கவனித்தனர்.
அதில், டெத் (death) எனும் வார்த்தையை (deth) என்று எழுத்துப்பிழையோடு எழுதப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு போதிய அளவில் கல்வி அறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதையும் படிக்க:சண்டீகர் பிரதேசத்துக்கு தலைமைச் செயலர் பதவி உருவாக்கம்!
இந்நிலையில், சஞ்சய் குமாருக்கு யாரிடமும் எந்தவொரு பகையும் இல்லை என்பதினாலும் மிரட்டி கேட்கப்பட்ட பணமும் அதிக மதிப்பில் இல்லாததினாலும் காவல் துறையினருக்கு கடத்தப்பட்ட சந்தீப்பின் மீது சந்தேகம் எழுந்தது.
அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் ரூபாபூர் எனும் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவரிடம் ஒரு தாளில் அதே ஆங்கில வாரத்தையை மீண்டும் எழுதக் கூறியுள்ளனர். அதில் அவர் மீண்டும் அதே எழுத்துப்பிழையோடு எழுதியதால் சந்தீப் தான் தன்னைத் தானே கடத்திக்கொண்டு தனது அண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
முன்னதாக, கடந்த டிச.30 அன்று மிர்சாப்பூரில் சந்தீப் தனது வாகனத்தில் சென்றப்போது ஒரு முதியவரை இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் கால் உடைந்த முதியவரின் மருத்துவச் செலவை தானே ஏற்கும் நிலையில் அவர் இருந்துள்ளர்.
இதனால், பணத்தேவைக்குள்ளான சந்தீப் சி.ஐ.டி நாடகத்தில் வருவதைப் போல் தன்னைத் தானே கடத்திக்கொண்டு பணம் கேட்டு மிரட்ட முயற்சித்ததாகக் கூறியுள்ளார்.