ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!
ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை சார்பில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் இன்று(ஏப். 17) நடைபெற்றது. இதற்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலளித்து சுற்றுலாத் துறை மேம்படுத்துவதற்காக சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவற்றின் விவரம்:
சேலம் மாவட்டம், ஏற்காடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஆகிய இடங்களில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள், இயற்கை எழில்கொஞ்சும் மலையின் அழகினை கண்டு ரசிக்கவும், ரோப் காரில் பயணித்து புதிய பயண அனுபவங்களைப் பெறும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த கம்பிவட ஊர்தி (ரோப் கார்) அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு நவீன சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டிலும், கன்னியாகுமரியில் ரூ. 20.00 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூரில் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி மற்றும் நாகூர் ஆகிய இடங்களை மேம்படுத்திட ரூ. 20.00 கோடி மதிப்பீட்டிலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 100.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் கூடுதல் தங்கும் அறைகள் மற்றும் உணவகம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் அமைக்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடிக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி புனரமைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் சாத்தனூர் அணைப்பகுதியில் சுற்றுலா அடிப்படை வசதிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தகவல் பலகைகள், தனித்துவம் வாய்ந்த வழிகாட்டிப் பலகைகள் ஆகியன ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் பொது-தனியார் பங்களிப்புடன் தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மற்றும் முள்ளக்காடு, திருநெல்வேலி மாவட்டம், உவரி கடற்கரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், ஆத்தங்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை சுற்றுலாத் துறை ராஜேந்திரன் அறிவித்தார்.
இதையும் படிக்க: மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு