ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போா்ா்கால வியூகங்கள், ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கியதாக அந்நாடு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஷாபாஸ் ஷெரீஃபுடன் பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா், பாதுகாப்பு அமைச்சா் க்வாஜா ஆசிஃப் மற்றும் ராணுவ தலைமை தளபதிகள் உள்ளிட்டோரும் ஐஎஸ்ஐ தலைமையகத்தை பாா்வையிட்டனா்.
அப்போது பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதேனும் தாக்குதல் நிகழ்ந்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அதிகாரிகளிடம் கூறியதாக பாகிஸ்தான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.