KPY பாலா: ``பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?" - சீமான் கேள்வ...
ஐதராபாத், பெங்களூருக்கு நிகராக விசாகப்பட்டினத்தை மேம்படுத்தப் போராடும் சந்திரபாபு நாயுடு மகன்
ஐதராபாத் ஐ.டி. வளர்ச்சிக்கு காரணம்
ஐதராபாத் நகரம் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான்.
1995ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமராவ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்றபோது, பெங்களூரு நகரம் தகவல் தொழில் நகரமாக விளங்கியது.
அந்த பெங்களூருக்குப் போட்டியாக ஐதராபாத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு, ஐதராபாத்துக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்தார். அவர் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். அமெரிக்காவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஐதராபாத்துக்கு அழைத்து வந்தார்.
ஐதராபாத்தில் ஏராளமான ஐ.டி. பூங்காக்களைக் கட்டினார். அதோடு “Bye Bye Bengaluru, Hello Andhra” என்ற கோஷத்தோடு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களை ஐதராபாத்துக்கு அழைத்தார்.

ஐதராபாத் ஐ.டி. வளர்ச்சியில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றி - தோல்விகள்:
இதனால் ஐதராபாத்தில் எல் & டி இன்ஃபோசிட்டி அசெண்டாஸ் பார்க், சைபர் கேட்வே, ரஹேஜா மைண்ட்ஸ்பேஸ் மாதப்பூர் ஐ.டி. பார்க் மற்றும் சைபர்பேர்ல் ஐ.டி. பார்க் போன்ற ஐ.டி. பூங்காக்கள் தங்களது அலுவலகங்களைத் திறந்தன. ஐதராபாத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்தனர்.
இதனால் சந்திரபாபு நாயுடுவை அனைத்து கம்பெனிகளும் தங்களது முதல்வர் என்று கொண்டாடின. ஆனாலும் பெங்களூருவோடு சந்திரபாபு நாயுடுவால் போட்டியிட முடியவில்லை.
தகவல் தொழில்நுட்பத்தில் பெங்களூரு முன்னேறிச் சென்றுவிட்டது. மற்றொரு புறம், ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டதில் சந்திரபாபு நாயுடுவின் கனவு நகரமான ஐதராபாதும் தெலங்கானாவிற்குச் சென்றுவிட்டது. இதனால் சந்திரபாபு நாயுடுவிற்கு இரண்டு பெரிய தோல்விகள் ஏற்பட்டன.
சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் அடுத்த பெரிய நகரை உருவாக்க முடியாமல், தேர்தல் தோல்வி மற்றும் சிறை போன்றவை தடையாக அமைந்தன.
சந்திரபாபு நாயுடு 52 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெகன் மோகனைக் “சைக்கோ முதல்வர்” என்று கூறி நாரா லோகேஷ் கடுமையாக விமர்சித்து போராட்ட களத்தில் நின்றார். சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்தபோது, அவரது நிழலாக நின்று வெளியில் நாரா லோகேஷ் பணியாற்றினார்.
விசாகப்பட்டினத்தை தொழில்நுட்ப மையமாக மாற்றிய முயற்சி
சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து வந்தபின் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதில் நாரா லோகேஷ் முக்கிய பங்கு வகித்தார். இதனால் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி பெற்றது.
தற்போது மத்திய கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், அதனைப் பயன்படுத்தி விசாகப்பட்டினத்தை ஐதராபாத் மற்றும் பெங்களூருக்கு நிகரான தொழில்நுட்ப நகரமாக மாற்றும் வேலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஈடுபட்டுள்ளார்.
தனது தந்தைக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பழி தீர்க்கும் விதமாக இந்தச் செயலில் நாரா லோகேஷ் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திராவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் நாரா லோகேஷ், சர்வதேச நிறுவனங்களை அழைத்து வந்து விசாகப்பட்டினத்தில் கிளைகளைத் திறக்கும்படி செய்து கொண்டிருக்கிறார்.

நாரா லோகேஷ் முயற்சி
எப்படியாவது விசாகப்பட்டினத்தை கொண்டு ஐதராபாத் மற்றும் பெங்களூருவை தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு நாரா லோகேஷ் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
2047ம் ஆண்டுக்குள் ஆந்திராவை உலக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்ததாக மாற்ற சந்திரபாபு நாயுடு இலக்கு நிர்ணயித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் டிஜிட்டல் டெக்னாலஜி மாநாட்டிற்கும் நாரா லோகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பேசிய நாரா லோகேஷ் டெக்னாலஜியில் விசாகப்பட்டினம் சர்வதேச அளவில் முதலிடத்திற்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது பெங்களூருவில் இருக்கும் மோசமான சாலைகளை சுட்டிக்காட்டி அங்குள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு நாரா லோகேஷ் தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கு கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கர்நாடகா ஏதாவது ஒன்றில் சறுக்கினால் அதனை நாரா லோகேஷ் தங்களது மாநிலத்திற்கு சாதகமாக மாற்றிக்கொள்ள தவறுவதில்லை.
2024-ம் ஆண்டு கர்நாடக அமைச்சரவை தனியார் வேலைகளில் உள்ளூர் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியபோது, ஆந்திராவின் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள், தயாராக உள்கட்டமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு இல்லாததை சுட்டிக்காட்டி பெங்களூருவை சேர்ந்த ஐடி நிறுவனங்களுக்கு நாரா லோகேஷ் அழைப்பு விடுத்தார்.
தனது தந்தையின் அரசியல் வாரிசாக செயற்கையாக வராமல் மக்களே ஏற்றுக்கொள்ளும் தலைவராக தன்னை மாற்றிக்கொள்வதில் நாரா லோகேஷ் தீவிரம் காட்டி வருகிறார்.