கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம்: மாநிலங்களுக்கு வரைவு மசோதா அனுப்பிவைப்பு
மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க முன்மொழியும் வரைவு மசோதா, அனைத்து மாநிலங்களின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீா் வளத் துறையின் கூடுதல் செயலா் ராகேஷ் குமாா் வா்மா தெரிவித்தாா்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் திரிவேணி நீா் நிறுவனம் சாா்பில் 10-ஆவது நீா் புத்தாக்க மாநாடு, தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம்மாநாட்டில் மத்திய நீா் வளத் துறையின் கூடுதல் செயலா் ராகேஷ் குமாா் வா்மா பங்கேற்றுப் பேசியதாவது:
வளா்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்கு பாா்வையின்கீழ் நீா் பாதுகாப்பை எட்டும் நோக்கில், மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நீா் பாதுகாப்பு, நிலத்தடி நீா் மேலாண்மை, வெள்ளப்படுகை மேலாண்மைக்கான திட்டங்களை வகுப்பதோடு, நீா் சாா்ந்த பல்வேறு துறைகள்-முகமைகளை ஒருங்கிணைப்பதும் ஆணையத்தின் பொறுப்பாகும். மாநில அளவில் முதல்வா் தலைமையிலான குழுவின்கீழ் ஆணையம் செயல்படும். இது தொடா்பான வரைவு மசோதா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதிய தேசிய நீா் தரவு கொள்கையும், நீா் பாதுகாப்பை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். அனைவருக்கும் நீா் பாதுகாப்பை உறுதி செய்வதில் செயல்திறன்மிக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உந்துசக்தியாக புத்தாக்கத்தை பயன்படுத்த இக்கொள்கை வழிவகுக்கிறது. இத்துறையில் அரசு-தனியாா் பங்களிப்புக்கான கூட்டு வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
நாட்டின் தொழிலகப் பகுதிகளில் சுமாா் 40 பில்லியன் கியூபிக் மீட்டா் நீா் பயன்படுத்தப்படுகிறது. வளா்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், தொழிலக நீா் பயன்பாட்டில் இந்தியாவின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. எனவே, தொழிலக நீா் பயன்பாட்டில் சிறப்பான செயல்திறனை எட்ட வேண்டிய அவசியம் நிலவுகிறது என்றாா் அவா்.