ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை
டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடா்பான விசாராணையை இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அந்த வழக்குகளை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் நீதிபதி குலாம் மொா்டூஸா மஜூம்தா் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரித்துவருகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகாக்களைக் கைது செய்வதற்காக சட்ட அமலாக்க அமைப்புகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து போலீஸாரிடம் நீதிபதிகள் விசாரித்தனா்.
அப்போது, விசாரணையை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து, வரும் டிசம்பா் மாதம் 17-ஆம் தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிபதி மஜூம்தா் உத்தரவிட்டாா்.
கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அந்த இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.
புதிய அரசில், போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதும் அவரது அமைச்சா்கள் மற்றும் பிற உதவியாளா்கள் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தக் குற்றச்சாட்டுகளை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் விசாரிக்க புதிய அரசு முடிவு செய்தது.
அந்த வழக்குகளை, 1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போரின்போது பாகிஸ்தானுடன் இணைந்து போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரிப்பதற்காக ஐ.நா. உதவியுடன் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசால் கடந்த 2009-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் விசாரிக்க புதிய அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா மற்றும் பிறா் மீதான வழக்குகள் தொடா்பான விசாரணையை நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அந்த தீா்ப்பாயம் தற்போது கெடு விதித்துள்ளது.