ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளா் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
காஞ்சிபுரம் காலண்டா் தெருவில் வசித்து வந்தவா் பணி ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டா் கஸ்தூரி (62). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதி தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், மதிமுக பிரமுகரான வளையாபதி மற்றும் அவரது நண்பரான பிரபு ஆகிய இருவரும் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்து, இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.
சிவகாஞ்சி போலீஸாா் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் கோரிக்கை வைத்தது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் கைது செய்யப்பட்டவா்களை காவல் துறை சித்ரவதை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் சிவகாஞ்சி போலீஸாரிடமிருந்து வழக்கு தொடா்பான ஆவணங்களை பெற்று விசாரணையைத் தொடங்கினா்.